முட்டையில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சு இருக்கிறதா..? கர்நாடக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்
கோழி முட்டையில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.;
கோப்புப்படம்
பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முன்னணி நிறுவனத்தின் முட்டைகளில், புற்றுநோயை உண்டாக்கும் 'நைட்ரோபியூரான்' (Nitrofuran) மருந்தின் கூறுகள் இருப்பதாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவிய செய்தி பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. இந்த அச்சத்திற்குப் பிறகு, மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் முட்டைகள் ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்படி கர்நாடக அரசின் சுகாதாரத்துறை முட்டைகளை ஆய்வுக்கு அனுப்ப முடிவு செய்தது. இதையடுத்து பெங்களூரு, மைசூரு, மண்டியா, சிவமொக்கா, பல்லாரி உள்பட மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முட்டைகள் மாதிரி சேகரித்து இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையத்தின் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், முட்டையில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன நச்சுகள் எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “கர்நாடகத்தில் முட்டையில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன நச்சு இருப்பதாக தகவல் பரவியது. இதனால் மக்கள் சற்று ஆதங்கப்பட்டனர். மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் நாங்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முட்டைகளை கொண்டு வந்து பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தோம். அதன் பரிசோதனை அறிக்கை வந்துள்ளது. முட்டையில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சு எதுவும் இல்லை என்று தெரியவந்துள்ளது. முட்டை சாப்பிடுவது பாதுகாப்பானது. அதனால் பொதுமக்கள் அச்சமின்றி முட்டையை சாப்பிடலாம்” என்று அவர் கூறினார்.