கொல்கத்தா சட்ட கல்லூரி மாணவி கும்பல் பலாத்கார விவகாரம்; 3 மாதங்களுக்கு பின் துணை முதல்வர் ராஜினாமா

கொல்கத்தா சட்ட கல்லூரி துணை முதல்வர் ராஜினாமா செய்த நிலையில், உதவி பேராசிரியராக பணியில் தொடர விரும்புகிறேன் என கூறியுள்ளார்;

Update:2025-09-18 22:11 IST

உள்படம்: மனோஜித் மிஷ்ரா

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் உள்ள தெற்கு கொல்கத்தா சட்ட கல்லூரியை சேர்ந்த மாணவி (வயது 24) ஒருவர் கல்லூரி வளாகத்தில் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரால் கடந்த ஜூன் மாதம் இறுதியில், மிரட்டி பலாத்காரம் செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஆர்.ஜி. கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், சட்ட கல்லூரியில் மாணவி பலாத்கார சம்பவம் நடந்துள்ளது மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் மனோஜித் மிஷ்ரா என்பவர் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராவார். அக்கட்சியின் மாணவரணியின் செயலாளராகவும் உள்ளார். கல்லூரியின் முன்னாள் மாணவரான அவருடன் அக்கட்சியை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர் ஜைப் அகமது (வயது 19) மற்றும் மற்றொரு மாணவர் பிரமீத் முகர்ஜி (வயது 20) ஆகிய இருவரும் மாணவியை பலாத்காரம் செய்து காயப்படுத்தி உள்ளனர் என அதுபற்றிய புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த புகாரில், இரவு 7.30 மணியில் இருந்து 10.50 மணி வரை 4 மணிநேரத்திற்கும் கூடுதலாக கல்லூரியில் பலாத்கார சம்பவம் நடந்துள்ளது. அந்த மாணவியை அவர்கள் ஆக்கி மட்டையால் அடித்தும், பலாத்கார சம்பவம் தொடர்பான வீடியோவை எடுத்தும், அதனை ஆன்லைனில் வெளியிட்டு விடுவோம் என அச்சுறுத்தியும் மற்றும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், கல்லூரியின் பாதுகாவலரான பினாகி பானர்ஜி (வயது 55) பின்னர் கைது செய்யப்பட்டார். இதனால், மொத்த கைது எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

பலாத்கார சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு, இதே சட்ட கல்லூரி வளாகத்தில் ஆளும் கட்சியின் கூட்டம் ஒன்றும் நடந்துள்ளது என்று கூறப்படுகிறது. அந்த மாணவி தப்ப முயன்றபோது, ஆக்கி மட்டையில் அடித்துள்ளனர். நீதி வேண்டும் என புகாரில் அவர் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் தொடர்ச்சியாக, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பா.ஜ.க.வினர் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டனர். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளது என குற்றச்சாட்டு கூறினர்.

கொல்கத்தா சட்ட கல்லூரி மாணவி கும்பல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில், 3 மாதங்களுக்கு பின் துணை முதல்வர் நொய்னா சாட்டர்ஜி ராஜினாமா செய்ய முன்வந்துள்ளார். இதன்படி, அக்டோபர் 1-ந்தேதி முதல் துணை முதல்வர் பதவியில் அவர் நீடிக்கமாட்டார்.

அவர், உதவி பேராசிரியராக பணியில் தொடர விரும்புகிறேன் என கூறியுள்ளார். எனினும், அவருடைய ராஜினாமாவை ஏற்பது பற்றி இன்னும் முடிவாகவில்லை என நிர்வாக குழு உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான மிஷ்ராவுக்கு எதிராக பல்வேறு புகார்கள் இருந்தபோதும், அவரை கல்லூரி வளாகத்தில் சுற்றி திரிய அனுமதித்து இருக்கிறார் என சாட்டர்ஜிக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

Tags:    

மேலும் செய்திகள்