லடாக் விவகாரம்: விளைவுகள் மோசமாக இருக்கும் - மெகபூபா முப்தி எச்சரிக்கை

லடாக்கில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் 4 பேர் பலியாகினர்.;

Update:2025-09-25 18:06 IST

ஸ்ரீநகர்,

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்தும் ஆறாவது அட்டவணை அந்தஸ்தும் கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார். அவரின் போராட்டத்தைத் தொடர்ந்து, கோரிக்கைகள் தொடர்பாக எல்.ஏ.பி. மற்றும் கார்கில் ஜனநாயக கூட்டணி (கே.டி.ஏ.) உடன் லடாக் தொடர்பான உயர்அதிகாரக் குழு அக்டோபர் 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் அறிவித்தது.

இந்த அறிவிப்பை ஏற்க மறுத்த சோனம் வாங்சுக், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள லடாக்கின் கோரிக்கைகள் தொடர்பாக ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையை மத்திய அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 10-ம் தேதிமுதல் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார். அவருடன் எல்.ஏ.பி. அமைப்பைச் சேர்ந்த 15 பேரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் இருவரின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, மருத்துவமனையில் நேற்று முன்தினம் மாலை அனுமதிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, எல்.ஏ.பி. அமைப்பின் இளைஞர் பிரிவு மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.

இந்தப் போராட்ட அழைப்பைத் தொடர்ந்து, லே நிர்வாகம் சார்பில் பி.என்.எஸ்.எஸ். சட்டப் பிரிவு 163-ன் கீழ் தலைநகரில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவை மீறி என்.டி.எஸ். நினைவு மைதானத்தில் நேற்று காலை கூடிய எல்.ஏ.பி. அமைப்பை சேர்ந்தவர்கள் உட்பட ஏராளமானோர் முழக்கங்களை எழுப்பியபடி கண்டனப் பேரணியையும் நடத்தினர். பேரணியின் போது சிலர் பா.ஜ.க. தலைமை அலுவலகம் மற்றும் மலைப் பிரதேச கவுன்சில் அலுவலகம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் பா.ஜ.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரர்களைக் கலைக்க முற்பட்டனர். பாதுகாப்புப் படையினர் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்கள், பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் மற்றும் பா.ஜ.க. அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் மற்றும் மரப்பொருள்களுக்குத் தீ வைத்தனர்.நிலைமை மோசமடைவதை உணர்ந்த பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை அமைதி திரும்பியது. பாதுகாப்புப் படையினர் ரோந்து சுற்றி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், லடாக் வன்முறை தொடர்பாக  ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கூறியதாவது: - லடாக் மக்கள் தங்களின் நிலம் பறிக்கப்படுமோ, அங்குள்ள கலாசாரம் மாறிவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். மத்திய அரசு லடாக்கை ஒரு திறந்த சிறைச்சாலையாக மாற்ற விரும்பினல் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்.லடாக்கில் நடந்த வன்முறைக்கு சமூக ஆர்வலர் சோனம் வான்சுக் மீது பழிபோடும் மத்திய அரசைக் கண்டிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்