திருமணமான பெண் மீது மோகம்; பின்தொடர்ந்து தொல்லை கொடுத்த வாலிபர்... அடுத்து நடந்த விபரீதம்

பாத்திமா தன்னை ஏற்றுக்கொள்ளாததால் அவரது கணவர் அபுபக்கர் மீது அமீனுர் அலிக்கு கோபம் ஏற்பட்டுள்ளது.;

Update:2025-07-23 19:57 IST

மும்பை,

மராட்டிய மாநிலம் நவி மும்பை பகுதியை சேர்ந்தவர் அபுபக்கர் சுதாலி மண்டல்(வயது 35). இவரது மனைவியான பாத்திமா(வயது 25) மீது, அதே பகுதியை சேர்ந்த அமீனுர் அலி(வயது 21) என்ற இளைஞர் காதல் வயப்பட்டுள்ளார். இதை அவர் பாத்திமாவிடம் கூறி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.

அதே சமயம் அமீனுர் அலியை கடுமையாக திட்டி அவரை பாத்திமா விரட்டியுள்ளார். ஆனால் அமீனுர் அலி விடாமல் பாத்திமாவை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை காலை வீட்டை விட்டுச் சென்ற பாத்திமாவின் கணவர் அபுபக்கர், இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் கலக்கமடைந்த பாத்திமா, தனது கணவரை காணவில்லை என காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதோடு, அமீனுர் அலி மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் போலீசாரிடம் அவர் கூறியுள்ளார். இதையடுத்து அமீனுர் அலியை பிடித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

பாத்திமா மீது கொண்ட மோகத்தாலும், அவர் தன்னை ஏற்றுக்கொள்ளாததால் வந்த ஏமாற்றத்தாலும் பாத்திமாவின் கணவர் அபுபக்கர் மீது அமீனுர் அலிக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த திங்கள்கிழமை வீட்டை விட்டுச் சென்ற அபுபக்கரை பின்தொடர்ந்து சென்று அவரை கொலை செய்த அமீனுர் அலி, உடலை சாக்கு மூட்டையில் கட்டி நீரோடையில் வீசியுள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தை வைத்து சம்பந்தப்பட்ட இடத்தில் சோதனை செய்த போலீசார், அபுபக்கரின் உடலை இன்று மீட்டுள்ளனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக அமீனுர் அலி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த கொலையில் அமீனுர் அலிக்கு அவரது நண்பர் ஒருவர் உதவி செய்ததாக கூறப்படும் நிலையில், அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்