ஒரே நாளில் 463 கைதிகளுக்கு ஜாமீன் வழங்கி பாட்னா ஐகோர்ட்டு சாதனை
ஒரே நாளில் 300 பேருக்கு ஜாமீன் வழங்கியதே இதற்கு முன்பு சாதனையாக இருந்தது.;
பாட்னா,
பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் அரசு, மதுபானம் இல்லா பீகாரை உருவாக்குவேன் என பெண் வாக்காளர்களுக்கு உறுதிமொழி வழங்கினார். அதனை நிறைவேற்றும் வகையில், 2016-ம் ஆண்டு ஏப்ரலில், மதுபான தடை சட்டம் அமலானது.
இதன்படி, பீகாரில் மதுபானம் உற்பத்தி, விற்பனை உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தடை சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு சிறை சென்ற கைதிகள் தொடர்பான 508 வழக்குகள் பாட்னா ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதி ருத்ரா பிரகாஷ் மிஷ்ரா தலைமையிலான ஒற்றை அமர்வு இதன் மீது விசாரணை நடத்தி, ஒரே நாளில் 463 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதற்கு முன் ஒரே நாளில் 300 பேருக்கு ஜாமீன் வழங்கியதே சாதனையாக இருந்தது.
இந்த புதிய தீர்ப்பு அதனை முறியடித்து உள்ளது. மதுபான தடை சட்டம் அதிகாரிகளால் தவறாக அமல்படுத்தப்பட்டதில், இந்தளவுக்கு ஜாமீன் கோரி வழக்குகள் குவிந்து விட்டன என கூறிய நீதிபதி, வழக்குகளை விரைந்து முடிக்க உதவியாக செயல்பட்ட அரசு வழக்கறிஞர்களின் முயற்சிகளுக்கு தன்னுடைய பாராட்டுதல்களையும் தெரிவித்து கொண்டார்.