இந்திய விண்வெளி நிலையத்தை உருவாக்க.. உள்நாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த இஸ்ரோ

விண்வெளி நிலையத்திற்கான முதல் தொகுதிக்கு உள்நாட்டு தொழில்துறை நிறுவனங்களை பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.;

Update:2026-01-21 11:13 IST

கோப்புப்படம்

சென்னை,

இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையமான பாரதிய அந்தரிக்‌ஷ் நிலையத்தை (பி.ஏ.எஸ்.) கட்டுவதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது, விண்வெளி நிலையத்திற்கான முதல் தொகுதிக்கு உள்நாட்டு தொழில்துறை நிறுவனங்களை பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது.

இஸ்ரோவின் கீழ் செயல்படும் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம், பி.ஏ.எஸ்-01 கட்டமைப்பின் 2 தொகுப்புகளை உருவாக்க தகுதிவாய்ந்த இந்திய விண்வெளி உற்பத்தியாளர்களைத் தேடும் ஆர்வ வெளிப்பாட்டை வெளியிட்டுள்ளது. இது இந்தியாவின் எதிர்கால விண்வெளி நிலையத்திற்காக குறைந்த பூமி சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்ட முதல் தொகுதியாகும்.

‘பாரதிய அந்தரிக்‌ஷ் நிலையம்', இந்தியாவின் மனித விண்வெளிப் பயண லட்சியங்களின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறது. குறிப்பாக, விண்வெளியில் நீண்டகால இருப்பு, மேம்பட்ட நுண் ஈர்ப்பு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் எதிர்கால மனித ஆய்வுப் பணிகளுக்காக இந்த நிலையம் செயல்பட உள்ளது.

இதற்கான ஒப்பந்தப்புள்ளியில் உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்க முடியும். வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்க தகுதியற்றவை. ஆர்வமுள்ள ஏலதாரர்கள் வருகிற மார்ச் 8-ந்தேதிக்குள் தங்களின் பங்களிப்பை தெரிவிக்க வேண்டும்.

இந்தியாவுடன் நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளின் நிறுவனங்கள், அரசாங்க விதிமுறைகளின்படி, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறையால் அமைக்கப்பட்ட பதிவுக் குழுவில் பதிவு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே ஏலம் எடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்