பெண்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான படி - ஜனாதிபதி முர்மு
பெண்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான படி என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.;
பெங்களூரு,
ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில் பெங்களூருவில் சர்வதேச பெண்கள் மாநாடு இன்று தொடங்கியது. ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடக்கிவைத்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியதாவது, இந்தியாவின் நாரி சக்தி திட்டம் பெண்களின் விருப்பம், சாதனை, பங்களிப்பை ஊக்குவிக்கிறது. அறிவியல், விளையாட்டு, அரசியல், கலை, கலாசாரம் என அனைத்திலும் நமது சகோதரிகள், மகள்கள் தலைநிமிர்ந்து முன்னேறி செல்கின்றனர். அவர்கள் குடும்பம், அமைப்பு, நாட்டை பெருமைப்படுத்துகின்றனர். மனவலிமையில்லாமல் தடைகள், சவால்களை உடைத்து எறிவது சாத்தியமில்லை.
ஒவ்வொரு பெண்ணும் தைரியத்துடன் மிகப்பெரிய கனவுகண்டு தங்களிடம் உள்ள அனைத்து வலிமையையும், திறனையும் கொண்டு தங்கள் கனவுகளை அடைய வேண்டும். உங்கள் நோக்கங்களை நோக்கி நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் வளர்ச்சியடைந்த இந்தியா, வளர்ச்சியடைந்த உலகத்திற்கான படி' என்றார்.