பரோடா மகாராணிக்கு நேரு ஆர்டர் செய்த ‘ரோல்ஸ் ராய்ஸ்’ காரால் விவாகரத்து.. என்ன நடந்தது..?
பெண்ணுக்கு அவரது கணவர் ரூ.2 கோடியே 25 லட்சம் தர வேண்டும் என்று இருதரப்புக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டது.;
கோப்புப்படம்
புதுடெல்லி,
மத்தியபிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், ஒரு ராணுவ அதிகாரிகள் குடும்பத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அந்த பெண், சத்ரபதி சிவாஜியின் கடற்படை தளபதியாக இருந்தவரின் வம்சாவளியை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
கடந்த 1951-ம் ஆண்டு், பரோடா மகாராணி சிம்னா பாய் சாஹிப் கெய்க்வாட் சார்பில் அப்போதைய பிரதமர் நேரு ஒரு ‘ரோல்ஸ் ராய்ஸ்’ கார் ஆர்டர் செய்தார். அந்த கார், கையால் தயாரிக்கப்பட்டது ஆகும். அந்த மாடல் ஒன்று மட்டுமே உள்ளது. தற்போது, அந்த கார், அப்பெண்ணின் தந்தை வசம் இருக்கிறது.
திருமணத்துக்கு பிறகு, அந்த காரையும், மும்பையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பையும் வரதட்சணையாக அளிக்குமாறு தன்னை கணவரும், அவருடைய குடும்பத்தினரும் துன்புறுத்தியதாக அப்பெண் மத்தியபிரதேச ஐகோர்ட்டின் குவாலியர் கிளையில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் கணவர் குடும்பம் அப்புகாரை மறுத்தது. பெண்ணின் வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
அதை எதிர்த்து அப்பெண் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அங்கும் ‘ரோல்ஸ் ராய்ஸ்’ கார் கேட்டதாக குறிப்பிட்டார். இதற்கிடையே, பெண்ணுக்கு கணவர் ரூ.2 கோடியே 25 லட்சம் தர வேண்டும் என்று இருதரப்புக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு இந்த உடன்பாடு தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்று, இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இருவரும் ஒருவரையொருவர் அவதூறு பேசக்கூடாது என்றும் உத்தரவிட்டனர்.