சுப்ரீம் கோர்ட்டில் இன்று முதல் மூத்த வக்கீல்கள் அவசர விசாரணை கோர தடை
தலைமை நீதிபதி அமர்வில் அவசர விசாரணை கேட்க அனுமதி கிடையாது என்று சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.;
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டில் ஒவ்வொரு நாளும் விசாரணை தொடங்கியவுடன், தலைமை நீதிபதி அமர்வு முன்பு வக்கீல்கள் ஆஜராகி, தங்கள் வழக்குகளை அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வது வழக்கம்.
இந்நிலையில், 11-ந் தேதியில் (இன்று) இருந்து தனது அமர்வில் மூத்த வக்கீல்கள் யாரும் தங்கள் வழக்குகளை அவசரமாக விசாரிக்குமாறு கேட்க அனுமதி கிடையாது, ஜூனியர் வக்கீல்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கட்டும் என்று கடந்த 6-ந்தேதி தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார். அதன்படி, தலைமை நீதிபதி அமர்வில் இன்று முதல் மூத்த வக்கீல்கள் அவசர விசாரணை கேட்க அனுமதி கிடையாது என்று சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.