நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு

கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட வழக்கில், தன் மீதான நடவடிக்கைக்கு தடை கேட்ட நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்டு;

Update:2025-08-07 11:46 IST

புதுடெல்லி,

டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. இவரது வீட்டில் கடந்த மார்ச் மாதம் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் சென்று தீயை அணைத்தபோது, வீட்டின் ஒரு அறையில், பாதி எரிந்த நிலையில், மூட்டை மூட்டையாக 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இது, நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் சிக்கிய விவகாரம் குறித்து விசாரிக்க, குழு ஒன்றை, சுப்ரீம் கோர்ட் அமைத்தது. தனக்கு எதிரான உள் விசாரணையின் சட்டப்பூர்வ செல்லுபடியை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. அவரது மனுவில், தனக்கு எதிரான விசாரணை நியாயமாக நடைபெறவில்லை என்றும் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தின் அவுட்-ஹவுசில் இருந்து பணம் கண்டெடுக்கப்பட்டதை மட்டுமே வைத்து குற்றத்தை நிரூபிக்க முடியாது என்றும் முறையிட்டிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணைக்குழு முறையற்றது என்றால் குழுவின் விசாரணையில் பங்கேற்றது ஏன்? யஷ்வந்த் வர்மாவின் செயல்பாடுகள் கேள்விக்குறியாக உள்ளது. தலைமை நீதிபதி, அரசால் அமைக்கப்பட்ட குழு சட்டத்திற்கு உட்பட்டே யஷ்வந்த் வர்மா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணம் தொடர்பான காட்சிகளைஇணையத்தில் வெளியிட்டது குறித்து, சுப்ரீம் கோர்ட்டில்  உரிய நேரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட வழக்கில், தன் மீதான நடவடிக்கைக்கு தடை கேட்ட நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்கிறோம். மனு மீதான தீர்ப்பு மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்