சத்தீஷ்கார் என்கவுன்டர்: 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.;
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
இதனிடையே, சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள தேசிய பூங்கா வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கடந்த வியாழக்கிழமை முதல் அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த தேடுதலின்போது தலைக்கு ரூ. 1 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட நக்சலைட்டு மத்தியக்குழு உறுப்பினர் சுதாகர், தலைக்கு ரூ. 45 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட பாஸ்கர் ஆகிய 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், பிஜாப்பூர் வனப்பகுதியில் இன்று 3வது நாளாக தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை தேடுதல் வேட்டையின்போது மேலும் 2 நக்சலைட்டுகள் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதன் மூலம் 3 நாட்களில் பிஜாப்பூர் வனப்பகுதியில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நக்சலைட்டுகளிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.