தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன்..?

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது.;

Update:2026-01-16 12:39 IST

சென்னை,

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆளுங்கட்சியான தி.மு.க. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளவும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்கவும் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றன.

ஆளுங்கட்சியான தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மக்கள் நீதி மய்யம் என பல கட்சிகள் வரிசை கட்டி நிற்கின்றன.

எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க. த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. இதுபோக, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துவிட்டது. புதிய வரவான நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், கூட்டணிக்கு பிற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தாலும் முதல்-அமைச்சர் வேட்பாளர் விஜய்தான் என்று கூறிவருகிறது.

தற்போதைய நிலையில், அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் வருகிற 23-ந்தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதற்காக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு பொதுக்கூட்டம் நடத்த முன்னேற்பாடிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மதுராந்தகத்தில் 23-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் பாஜக மாநாடு நடைபெற உள்ள நிலையில், இந்த மாநாட்டு வரவேற்பு பதாகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் புகைப்படம் இடம்பெற்று உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அமமுக வெளியேறியதாக டிடிவி தினகரன் தெரிவித்திருந்த நிலையில், அவரது புகைப்படம் இடம்பெற்றிருப்பது, அவர் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய உள்ளாரா? என அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் அமமுக இடம்பெறாத கூட்டணி தேர்தலில் வெற்றி அடையாது என்றும் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்போம் என டிடிவி தினகரன் கூறிய நிலையில், இதுமிகப்பெரிய எதிர்பார்ப்பை எற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்