டெல்லியில் விஜய் நடத்திய ஆலோசனை: தேர்தல் கூட்டணி அமைகிறதா..?

த.வெ.க. தலைவர் விஜய்யிடம் இன்று நடைபெறுவதாக இருந்த சி.பி.ஐ. விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.;

Update:2026-01-13 06:36 IST

புதுடெல்லி,

தவெக தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதன்படி இந்த விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். இந்தநிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த மாதம் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கட்சியின் இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். அங்கு சிபிஐ அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் விளக்கம் அளித்தனர். இந்தநிலையில், கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பினார்கள்.

அதில் 12-ம் தேதி காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதனையடுத்து தவெக தலைவர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அவருடன் தனி விமானத்தில் தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கட்சியின் இணைபொதுச்செயலாளர் நிர்மல் குமார், இணை பொருளாளர் ஜெகதீஷ் பழனிசாமி, உதவியாளர் ராஜேந்திரன், விஷ்ணு ரெட்டி, பாதுகாப்பு அதிகாரி நயீம் ஆகியோரும் உடன் சென்றனர்.

 

பின்னர் காலை 11.30 மணியளவில் விஜய், சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜரானார். உடனடியாக விஜய்யிடம் விசாரணை தொடங்கியது. அப்போது அவரிடம் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.* கரூரில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது யார்? உங்களுக்கு அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்பட்டதா? * நிகழ்ச்சிக்கு செல்ல பல மணி நேர தாமதம் ஏன்? * கூட்டம் அதிகரித்தபோது கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சித்தீர்களா? *கூட்ட நெரிசல் பற்றி எப்போது அறிந்தீர்கள்? இதுகுறித்து நிர்வாகிகள் முன்கூட்டியே தெரிவிக்கவில்லையா? தண்ணீர், பாதுகாப்பான நுழைவு, வெளியேறும் வழி போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டதா?’’ என விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் 1.30 மணி நேரமாக கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

அந்த கேள்விகளுக்கு ஒவ்வொன்றுக்கும் விஜய் விளக்கம் அளித்ததாக தெரிகிறது. கரூர் சம்பவம் தொடர்பாக இதுவரை பலரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி விளக்கம் பெற்றுள்ள நிலையில் அதன அடிப்படையிலும் பல கேள்விகளை விஜய்யிடம் கேட்டதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான தவெக தலைவர் விஜய்யிடம் சுமார் 7 மணி நேரமாக நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது. இந்தநிலையில், விஜய்யிடம் இன்று நடைபெறுவதாக இருந்த சிபிஐ விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. விஜய்யின் கோரிக்கையை ஏற்று விசாரணையை சிபிஐ ஒத்திவைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

தேர்தல் கூட்டணி - விஜய் ஆலோசனை

சி.பி.ஐ. விசாரணை முடிந்த நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் உடனடியாக சென்னை திரும்பவில்லை. அவர் சொகுசு ஓட்டலில் தங்கினார். அங்கு அடுத்தக்கட்டமாக என்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது? என்பது குறித்த சட்ட ஆலோசனைகளை சட்ட நிபுணர்களிடம் பெற்றதாக தெரிகிறது.

மேலும் ஜனநாயகன் விவகாரம், தேர்தல் சின்னம் விவகாரம் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தியுள்ளார். இரவில் வெகுநேரம் வரை இந்த ஆலோசனை நடந்துள்ளது. இது தவிர, தேர்தல் கூட்டணி ஆலோசனையும் நடந்துள்ளது. இது தொடர்பாக சில அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் விஜய் இன்று சென்னை திரும்புவார் என தவெகவினர் தரப்பில் கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு பின் மீண்டும் விஜய்யிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது..

Tags:    

மேலும் செய்திகள்