அரசு பள்ளிகளில் மாற்றுச்சான்றிதழ் இல்லாத மாணவர்களும் சேர்ப்பு

தனியார் பள்ளிகளில் படித்து மாற்றுச்சான்றிதழ் இல்லாமல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களும் அரசு பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

Update: 2022-06-17 18:15 GMT

புதுச்சேரி

தனியார் பள்ளிகளில் படித்து மாற்றுச்சான்றிதழ் இல்லாமல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களும் அரசு பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

மாணவர் சேர்க்கை

புதுவையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற 23-ந்தேதி திறக்கப்பட உள்ளன.இந்த நிலையில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிர மடைந்துள்ளது.

கொரோனா காலகட்டத்தில் போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் தனியார் பள்ளிகளில் படித்த தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர் பலர் உரிய கல்விக்கட்டணத்தை செலுத்த முடியவில்லை. பலர் வேலைகளை பறிகொடுத்ததால் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.

மாற்றுச்சான்றிதழ் தேவையில்லை

வழக்கமாக ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு சென்றால் மாற்றுச்சான்றிதழ் (டி.சி.) இருந்தால் மட்டுமே சேர்க்கப்படுவார்கள். ஆனால் கொரோனா பாதித்த கடந்த 2 ஆண்டுகளாக (கட்டாய கல்வி உரிமை சட்டப்படி) அந்த நிலை கைவிடப்பட்டுள்ளது. 1 முதல் 8-ம் வகுப்பு வரை அவர்களது வயதை கணக்கிட்டு மாற்றுச்சான்றிதழ் இல்லாமல் உரிய வகுப்புகளில் சேர்க்கை வழங்கப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் 9-ம் வகுப்பு உள்ளிட்ட பிற வகுப்புகளுக்கு மாற்றுச்சான்றிதழ் கொண்டே சேர்க்கை நடத்தப்படுகிறது. அரசு பள்ளிகளில் கெடுபிடி இல்லாமல் மாணவர் சேர்க்கை நடத்தப்படுவது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளது. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம், ஆங்கில வழிக்கல்வி ஆகியவையும் பெற்றோர்களிடம் அரசு பள்ளி மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது.

சேர்க்கை அதிகரிப்பு

வழக்கத்தைவிட அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. ஒரு சில பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் புதியதாக 10 மாணவர்கள் வரை சேருவது தெரியவந்துள்ளது. கிராமப்புறங்களில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிக அளவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நகரப்பகுதியில் உள்ள திருவள்ளுவர் அரசு பெண்கள் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் பெரும்பான்மையான இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. மாணவர் சேர்க்கைக்கு போதிய இடம் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்