அதிக அளவில் மாணவர்களை ஏற்றிச்சென்ற ஆட்டோக்களுக்கு அபராதம்

விபத்தில் மாணவிகள் படுகாயமடைந்ததன் எதிரொலியாக அதிக அளவில் பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற ஆட்டோக்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

Update: 2023-06-22 17:10 GMT

புதுச்சேரி

விபத்தில் மாணவிகள் படுகாயமடைந்ததன் எதிரொலியாக அதிக அளவில் பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற ஆட்டோக்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

பஸ் - ஆட்டோ மோதல்

புதுச்சேரி புஸ்சி வீதியில் கடந்த 20-ந் தேதி தனியார் பஸ்சும், பள்ளி மாணவிகளை ஏற்றி வந்த ஆட்டோவும் நேருக்கு நேர் மோதின. இதில் மாணவிகள் 8 பேர் மற்றும் ஆட்டோ டிரைவர் விக்னேஷ் (வயது22) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனியார் பஸ் டிரைவரான விழுப்புரத்தை சேர்ந்த அன்பரசனை கைது செய்தனர். ஆட்டோ டிரைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திடீர் சோதனை

பஸ் - ஆட்டோ விபத்து எதிரொலியாக போக்குவரத்து போலீசார் ஆட்டோக்களில் 5 மாணவர்களுக்கு மேல் ஏற்றிச்செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.

இந்தநிலையில் புதுச்சேரியில் உள்ள முக்கிய சந்திப்புகளில் இன்று காலை போக்குவரத்து போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள்.

ஒதியஞ்சாலை போலீஸ் நிலையம் அருகே போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அந்த வழியாக பள்ளி மாணவர்களை அழைத்து வந்த ஆட்டோக்களை நிறுத்தி அதிரடியாக சோதனை செய்தனர்.

அபராதம்

அப்போது ஆட்டோக்களில் எத்தனை மாணவ-மாணவிகள் உள்ளனர்? அளவுக்கு அதிகமாக ஏற்றிச்செல்லப்படுகிறார்களா? என ஆய்வு செய்தனர். டிரைவர்களிடம், ஆட்டோவை செல்போனில் பேசிய படியோ, வேகமாகவோ ஓட்டக்கூடாது, மாணவர்களின் புத்தக பைகளை ஆட்டோவில் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் வகையில் தொங்க விடக்கூடாது, போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். சோதனையின்போது 10 மாணவர்களை அழைத்து வந்த 2 ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

புதுவை ரங்கப்பிள்ளை வீதியில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் அங்கு ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்