தேடப்படும் அதிகாரி பெங்களூருவில் தலைமறைவு

கோவில் நில மோசடியில் தேடப்பட்டு வரும் அரசு அதிகாரி பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.

Update: 2023-08-31 17:25 GMT

புதுச்சேரி

கோவில் நில மோசடியில் தேடப்பட்டு வரும் அரசு அதிகாரி பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.

கோவில் நிலம் அபகரிப்பு

புதுவை காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள நிலம் போலி பத்திரங்கள் மூலம் அபகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் சார் பதிவாளர் சிவசாமி உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த மோசடிக்கு நில அளவை மற்றும் பத்திரப்பதிவேடுகள் துறை இயக்குனர் ரமேஷ், மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி (அப்போதைய செட்டில்மெண்ட் அதிகாரி) ஆகியோரும் இதில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.

பணியிடை நீக்கம்

இதன்காரணமாக அவர்களும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தாங்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்பதால் இருவரும் தலைமறைவானார்கள். இந்தநிலையில் அவர்களது முன்ஜாமீன் மனுக்களும் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து அவர்களை பிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் தலைமையிலான போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். அதன்பலனாக நேற்று சென்னை கோயம்பேட்டில் வைத்து பாலாஜி கைது செய்யப்பட்டார்.

பெங்களூருவில் பதுங்கல்

இந்தநிலையில் அதிகாரி ரமேஷ் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவர் எந்த நேரமும் கைது செய்ய வாய்ப்பு உள்ளது.

இதனிடையே பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவருக்கும் இந்த மோசடியில் தொடர்பு உள்ளது என்றுகூறி பல்வேறு சமூக அமைப்பினரும் ஏற்கனவே தொடர் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை கைது செய்யக்கோரி சுவரொட்டிகளும் ஒட்டபட்டுள்ளன.

அதிகாரிகள் கைது படலம் முடிந்ததும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் பார்வை அரசியல்வாதிகள் பக்கம் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் மத்தியில் கிலியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்