ஊத்தங்கரை அருகே 15-ம் நூற்றாண்டு குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஊத்தங்கரை அருகே ஆனந்தூரில் 15-ம் நூற்றாண்டு குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-11-26 21:08 IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள ஆனந்தூரில் உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் ஆய்வு மாணவர்கள் பேராசிரியர் ஜீவாவுடன் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மண்ணில் புதைந்த நிலையில் இருந்த கல்வெட்டை அவர்கள் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த கல்வெட்டை அவர்கள் வெளியில் எடுத்து படித்தனர். இதுகுறித்து உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் கல்வெட்டியல் துறை பேராசிரியர் ஜீவா கூறியதாவது:-

ஆனந்தூரில் 4 அடி அகலமும், 5 அடி உயரமும் கொண்ட கல்லில் குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு கிடைத்துள்ளது. சித்திரமேழி பெரிய நாட்டார் என்கிற பெரு வணிக குழுவினரால் கட்டப்பட்ட தான்தோன்றீஸ்வரர் சிவன் கோவிலுக்கு, பொன்னை தானமாக வழங்கியுள்ளது இந்த கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது.

இந்த கல்வெட்டை சேதப்படுத்துவோர் பசுவை கொன்ற பாவத்திற்கு ஆளாவார்கள் என்கிற செய்தியுடன் 13 வரிகளில் முழுமையாக காணப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே உள்ள தாமரைப்பாக்கம் அக்னீஸ்வரர் கோவிலை கட்டி கொடுத்த அதே வணிகக்குழு தான் இவர்கள். இதை ஓய்வு பெற்ற தொல்லியல் ஆய்வறிஞர் பூங்குன்றன் உறுதிப்படுத்தி உள்ளார்.

இதன் மூலம் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி பகுதிகளில் இந்த வணிகக்குழு மிகப்பெரிய அளவில் இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. இந்த கல்வெட்டின் மேல் பகுதியில் திருமகள் உருவமும், வலது, இடது புறங்களில் முறையே சூலம் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் உள்ளன. கல்வெட்டு குலோத்துங்க சோழனின் காலமான 15-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பதை அறிய முடிகிறது.

900 ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்த ஊர் மற்றும் கடவுளின் பெயர் கல்வெட்டில் உள்ளவாறே இன்றும் புழக்கத்தில் உள்ளது சிறப்பான ஒன்றாகும். இந்த பகுதியில் ஆய்வு செய்தால் மேலும் பல வரலாற்று தொடர்பு ஆவணங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்