திருநெல்வேலியில் 2025-ம் ஆண்டு இதுவரை 150 பேர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் ரவுடிகள், சமூக விரோதிகள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-11-26 19:40 IST

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி பகுதியில் பல்வேறு வழக்குகளில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், பொன்னன்குறிச்சி, வடக்கு தெருவை சேர்ந்த முத்துபலவேசம் மகன் வள்ளிமுத்து(எ) பாண்டி (வயது 24) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கொலை, கொலை முயற்சி, அடிதடி மற்றும் குற்றமுறு மிரட்டல் போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக சிவந்திபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா கவனத்திற்கு வந்தது.

அதேபோல் திருக்குறுங்குடி பகுதியில் பல்வேறு வழக்குகளில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடியை சேர்ந்த அன்னபாண்டி மகன் தங்கபாண்டி(26) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கொள்ளை, அடிதடி மற்றும் குற்றமுறு மிரட்டல் போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருக்குறுங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வி கவனத்திற்கு வந்தது.

இதனையடுத்து சிவந்திபட்டி, திருக்குறுங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மேற்சொன்ன 2 பேர் மீதும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (Act 14/1982) கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதன் பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், மேற்சொன்ன 2 குற்றவாளிகளும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நேற்று (25.11.2025) பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மக்களின் பாதுகாப்பை கருதி, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும். அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை கொலை, கொலை முயற்சி, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபட்ட 108 பேர், பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 24 பேர், போதைப் பொருட்கள் விற்பனை செய்த 18 பேர் என மொத்தம் 150 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், சட்ட விரோதமாக செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், கெட்ட நடத்தைக்காரர்கள், வழிப்பறி குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் சமூக விரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்