2009-ம் ஆண்டு ஐகோர்ட்டில் நடந்த மோதல் சம்பவம் - வழக்குகள் ரத்து

சம்பவத்தை மறந்து கடந்து செல்வோம் என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.;

Update:2025-11-27 15:37 IST

சென்னை,

கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டுக்கு வந்த ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி மீது சிலர் தாக்குதல் நடத்த முயற்சித்தனர். இது தொடர்பாக வழக்கறிஞர்கள் சிலரை போலீசார் கைது செய்தபோது, போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது.

தமிழகத்தில் பெரும் அதிரவலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை எழும்பூர் கோர்ட்டில் நிலுவையில் இருந்த நிலையில், வழக்கை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் ரஜினிகாந்த் உள்ளிட்ட 28 வழக்கறிஞர்களும், 4 காவல்துறை அதிகாரிகளும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி நிர்மல்குமார் முன்பு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், மோதல் சம்பவத்தின்போது தான் ஒரு வழக்கறிஞராக இருந்ததாகவும், அனைத்து நிகழ்வுகளையும் நேரில் பார்த்ததாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து வழக்கின் தீர்ப்பை நீதிபதி தள்ளிவைத்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி நிர்மல்குமார் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். இதன்படி 2009-ம் ஆண்டு ஐகோர்ட்டில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக போலீசார், வழக்கறிஞர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், சம்பவத்தை மறந்து கடந்து செல்வோம் என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்