தூத்துக்குடியில் 275 கிலா புகையிலை பொருட்கள், கார் பறிமுதல்: வாலிபர் கைது
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் மற்றும் போலீசார் வெள்ளமடம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.;
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. உத்தரவின்படி, சாத்தான்குளம் உட்கோட்ட டி.எஸ்.பி. மேற்பார்வையில், நாசரேத் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் மற்றும் போலீசார் இன்று (4.12.2025) நாசரேத் வெள்ளமடம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர் சாத்தான்குளம் தெர்க்கன்குளம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் பச்சைமால் (வயது 27) என்பதும், அவர் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக காரில் வைத்திருந்ததும் தெரியவந்நது.
உடனடியாக மேற்சொன்ன போலீசார் பச்சைமாலை கைது செய்து, அவரிடமிருந்து மொத்தம் 275 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து நாசரேத் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.