டிரோன் மூலம் பருத்தியில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க விவசாயிகளுக்கு மானியம்: வேளாண்மை அதிகாரி தகவல்
கோவில்பட்டி வட்டாரத்தில் சுமார் 900 ஹெக்டேர் மானாவாரி பரப்பளவில் பருத்தி பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.;
கோவில்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் மணிகண்டன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கோவில்பட்டி வட்டாரம் பெரும்பாலும் மழையை எதிர்பார்த்து விவசாயம் செய்யக்கூடிய மானாவாரி விவசாயிகள் அதிகம் உள்ள பகுதி ஆகும். இப்பகுதியில் சுமார் 900 ஹெக்டேர் மானாவாரி பரப்பளவில் பருத்தி பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
பருத்திப் பயிர்களில் பொருளாதார சேதத்தை உண்டாக்கும் பல பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சிகொல்லி மருந்து தெளிப்பது அவசியமாகிறது. விசைத்தெளிப்பான்கள் அல்லது கைத்தெளிப்பான்கள் மூலம் பூச்சிகொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதால் பூச்சிக் கொல்லிகளின் செயல்திறன் கூடுவதுடன் ஆட்கள் கூலி, நேரம், தண்ணீர் சேமிக்கப்படுகிறது. பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டு அளவும் குறைகிறது.
எனவே பருத்தி பயிரில் டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதனை ஊக்குவிக்கும் விதமாக வேளாண்மை துறை வாடகை கட்டணமாக ஹெக்டேருக்கு ரூ.1,250 பின்னேற்பு மானியமாக வழங்குகிறது. எனவே கோவில்பட்டி வட்டாரத்தில் பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து இந்த மானியத் திட்டத்தினை பயன்படுத்தி கொண்டு பயனடையலாம்.
இதற்கு ஆதார் அட்டை நகல், பட்டா நகல் மற்றும் ரேஷன் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், பூச்சிக்கொல்லி தெளிப்பதற்கான வாடகைக் கட்டண பட்டியல் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகள் டிரோன் கொண்டு தெளித்த புகைப்படங்கள் ஆகிய ஆவணங்களை கோவில்பட்டி வேளாண்மை விரிவாக்க மையம் அல்லது எட்டயபுரம் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் சமர்ப்பித்து விவசாயிகள் மானியத்தை பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.