திமுக ஆட்சியில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன - மு.க.ஸ்டாலின் பேச்சு

ரூ.342.60 கோடி மதிப்பீட்டில் தற்போது புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படுகிறது.;

Update:2026-01-19 11:43 IST

சென்னை,

சென்னை அடுத்த நெம்மேலியில் நீர்வளத்துறை சார்பில் 342 கோடி ரூபாய் செலவில் புதிதாக மாமல்லன் நீர்த்தேக்கம் அமைகிறது. சென்னையின் 6-வது நீர்த்தேக்கமான மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் கூறியதாவது;

‘காற்றும் நீரும் இந்த பூமியில் இருப்பதால் தான் உயிரினங்கள் உருவாகி வாழ்கிறோம். நீரின்றி அமையாது உலகு என உலகப் பொதுமறையில் எடுத்துக்கூறினார் வள்ளுவர். இயற்கையோடு இணைந்ததுதான் தமிழர் வாழ்வு. அதை ஒட்டியே திராவிட மாடல் அரசு நடைபெறுகிறது.

தி.மு.க. ஆட்சியில் அணைகள் கட்டப்படவில்லை என பொய் சொல்கிறார்கள்.* 1967 - 2011 தி.மு.க. ஆட்சி கால கட்டங்களில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன.* 43 நீர்த்தேக்கங்களை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. மேட்டூர் அணை முழுவதும் நிரம்பி குறித்த நேரத்தில் திறந்து வைத்திருக்கிறோம். காவிரி டெல்டா பகுதிகளில் ரூ.459 கோடியில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றன. 121 தடுப்பணைகள், 63 அணைக்கட்டுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரூ.342.60 கோடி மதிப்பீட்டில் தற்போது புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படுகிறது. புதிய நீர்த்தேக்கம் மூலம் நாளொன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் குடிநீரை வழங்க முடியும். 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு இந்த நீர்த்தேக்கம் பயன்படும். 34 கி.மீ. நீள கரையுடன் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்பட உள்ளது.

சென்னையைச் சுற்றி செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஏரிகள் ஏற்கனவே உள்ளன. நிதி மேலாண்மை போல் நீர் மேலாண்மையும் மிக மிக முக்கியம். தலைநகர் சென்னைக்காக தி.மு.க. அரசு எத்தனையோ திட்டங்களை செய்து கொடுத்திருக்கிறது. சென்னையின் முகமே மாறக்கூடிய வகையில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறோம்.’

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்