தமிழகத்தில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை - அன்புமணி கண்டனம்
பெண் காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.;
சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முதலமைச்சரின் பாதுகாப்புக்கு வந்திருந்த பெண் காவலர் கழிவறை பயன்படுத்திய போது, செல்போன் மூலம் வீடியோ எடுத்ததாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முதலமைச்சர் பங்கேற்கும் அரசு நிகழ்வில் பாதுகாப்பு பணிக்காக சென்ற பெண் காவலருக்கு நடைபெற்றிருக்கும் இந்த அவலச் சம்பவம், தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எந்தளவிற்கு கேள்விக்குறியாகியிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுத்து அவர்களுக்கான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டிய காவல் அதிகாரி ஒருவரே சக பெண் காவலரை போகப் பொருளாக பார்த்திருப்பது ஒட்டுமொத்த காவல்துறைக்கும் மிகப்பெரிய இழுக்கை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
எனவே, பெண் காவலரை துன்புறுத்தும் வகையில் நடந்து கொண்ட காவல் சிறப்பு ஆய்வாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, முதலமைச்சர் பாதுகாப்பு பணிக்கு வரும் பெண் காவலர்களோடு, அனைத்து பெண் காவலர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.