கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு 4,764 சிறப்பு பஸ்கள் இயக்கம் - திருவண்ணாமலை கலெக்டர் தகவல்
நகருக்கு வெளியில் 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைய உள்ளன என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந்தேதி நடைபெற உள்ளது. இதை யொட்டி பஸ்கள் இயக்கம் குறித்து அனைத்து மண்டல மேலாளர்களுடன் போக்குவரத்து கழக பொது ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் தர்பகராஜ் தலைமை வகித்து பேசியதாவது:-
கார்த்திகை தீபத் திருவிழா அன்று நகருக்கு வெளியில் மார்க்கெட்டிங் கமிட்டி (திண்டிவனம் சாலை), சர்வேயர் நகர் (வேட்டவலம் சாலை). நகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி எதிரில் (திருக்கோவிலூர் சாலை), மணலூர்பேட்டை சாலை, விட்டோ டிஜிட்டல் இடம், அத்தியந்தல் (செங்கம் சாலை), டான்போஸ்கோ பள்ளி (காஞ்சி சாலை), அண்ணா நுழைவு வாயில் (வேலூர் சாலை), கிளியாப் பட்டு சந்திப்பு (அவலூர்) பேட்டை சாலை) ஆகிய 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைய உள்ளன.
மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 4,764 சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் 70 மினி பஸ்களும் இயக்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.