மல்லை சத்யா மீது நடவடிக்கை? - துரை வைகோ பதில்
மதிமுகவுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று துரை வைகோ கூறினார்.;
திருச்சி,
திருச்சியில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அரசியல் இயக்கங்களில் தவறுகள் நடப்பது இயல்புதான். அதிமுகவுடன் கூட்டணி வைத்தது தவறானது என்பதை வைகோ வெளிப்படையாக கூறியுள்ளார். அதற்காக அதிமுக தீண்ட கூடாத கட்சி அல்ல. எம்.ஜி.ஆரையோ, ஜெயலலிதாவையோ அவர் இழிவுபடுத்தி எதுவும் கருத்து கூறவில்லை.
மல்லை சத்யா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு எடுக்கும். மதிமுகவில் இருந்து 3 ஆண்டுகளுக்கு முன்பு நீக்கப்பட்டவரை தான் திமுகவில் சேர்த்துள்ளார்கள். இன்னும் ஒரு டஜன் பேர் அவ்வாறு உள்ளார்கள். அதில் ஒருவர் திமுகவில் சேர்ந்து விட்டார். மற்றவர்கள் வேறு சில இயக்கங்களில் சேரலாம். மதிமுகவின் தொண்டர்களையோ, நிர்வாகிகளையோ திமுகவில் சேர்க்கவில்லை.
மதிமுகவில் இன்னும் சிலர் ஒதுங்கி இருக்கிறார்கள். தலைமைக்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களும் வேறு சில இயக்கங்களில் இணையலாம். அது அவர்களின் உரிமை. கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தலைவர் தான் முடிவு எடுப்பார். கூட்டணியில் 12 இடங்கள் வேண்டும் என மதிமுக எங்கும் கேட்கவில்லை, எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து கூட்டணி தலைமையுடன் பேசி தேர்தல் நேரத்தில் தலைவர் முடிவெடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.