அதிமுக நிறுவ முயலுவது பாஜக விரும்பும் ஆட்சியே தவிர, அண்ணா விரும்பும் ஆட்சி அல்ல - வன்னி அரசு
அமித்ஷாவின் தமிழ்நாட்டு ஏஜென்ட்டாக செயல்படவே எடப்பாடி பழனிசாமி துடித்துக் கொண்டிருக்கிறார் என்று வன்னி அரசு கூறியுள்ளார்.;
சென்னை,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
திண்டுக்கல்லில் முதல்வர் இன்று ஆற்றிய உரை மிக முக்கியமானது. தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் தான் போட்டி என முழங்கியுள்ளார் முதல்வர். தமிழ்நாட்டின் நலனுக்கான, தமிழர்களின் இறையாண்மைக்கான, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான, மதவெறியற்ற சமூக நல்லிணக்கத்துக்கான ஆட்சியை நடத்தி வரும் திமுக அரசை அகற்றிவிட்டு,
சனாதனத்தை நிறுவிட, மதவெறியை பரப்பிட, பார்ப்பன இந்தியாவை அமைத்திட, புரட்சியாளர் அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தை அகற்றி விட்டு, ஜி.ஆர்.சுவாமி நாதன் போன்றோர் விரும்பும் மனு சட்டத்தை செயல்படுத்த துடிக்கிறது பாஜக. அதற்கு உற்ற உறுதுணையாக இருக்கிறது அதிமுக.
முதல்வர் ஸ்டாலின் சொன்னது போல, அதிமுக நிறுவ முயலுவது பாஜக விரும்பும் ஆட்சியே தவிர, பேரறிஞர் அண்ணா விரும்பும் ஆட்சி அல்ல. டெல்லி பாதுஷா அமித்ஷாவின் தமிழ்நாட்டு ஏஜென்ட்டாக செயல்படவே எடப்பாடி பழனிசாமி துடித்துக்கொண்டு இருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டை டெல்லி ஆள வேண்டுமா? நாமே ஆள வேண்டுமா?
டெல்லிக்காரர்களுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை? தமிழர் இறையாண்மையை மீட்டெடுக்க, பாஜக, அதிமுக கூட்டணியை வீழ்த்துவது ஒவ்வொரு ஜனநாயகனின் கடமையாகும். பாஜக கூட்டணியின் ஒட்டுக்குழுக்களாக ஒண்டி பிழைக்கும் நாதக, தவெக போன்றோரை வழக்கம் போல வைப்புத்தொகையை இழக்க வைப்பது முதன்மை கடமையாக செயல்படுவோம்! 2026-ம் ஆண்டை தமிழ்நாட்டை காக்கும் ஆண்டாக முன்னெடுப்போம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.