அமெரிக்கா எச்-1பி விசா அனுமதி 4,500 ஆக சரிவு
அமெரிக்கா எச்-1பி விசா அனுமதி 4,500 ஆக சரிந்துள்ளது.;
சென்னை,
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து ‘அமெரிக்கா முதலில்’ என்ற கொள்கையை வலியுறுத்தி வருகிறார். அதன்படி வெளிநாட்டு பொருட்கள் மீதான இறக்குமதி வரியை பரஸ்பரம் உயர்த்துதல், சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து நாடு கடத்துவது, வெளிநாட்டவர்கள் அதிகம் படிக்கும் பல்கலைக்கழகங்களில் நிதிகுறைப்பு போன்ற அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
மேலும் அமெரிக்காவில் தங்கி பணிபுரிவதற்கான எச்-1பி விசா கட்டணத்தை ரூ.89 லட்சமாக (1 மில்லியன் டாலர்கள்) உயர்த்தினார். இதனால் அமெரிக்காவில் அதிகளவில் தங்கி பணிபுரியபோகும் ஊழியர்கள், என்ஜினீயர்கள், டாக்டர்கள் உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்தியாவை சேர்ந்த முன்னணி 7 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களாக டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (டி.சி.எஸ்.), இன்போசிஸ், விப்ரோ, எச்.சி.எல். எல் அண்ட் டி மைன்ட் டிரீ, டெக் மகேந்திரா, காக்னிசன்ட் ஆகியவை உள்ளன. இவை அமெரிக்காவில் தங்களுடைய நிறுவனங்களின் கிளைகளை அமைத்து தகவல் மென்பொருள் என்ஜனீயர்களை பணிக்கு அனுப்பி வருகிறது. அங்கு தங்கியிருந்து (ஆப்சைட்) பணிபுரிய அமெரிக்காவின் எச்-1பி விசாவை பெறுவது கட்டாயமாகும்.
தற்போது விசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்திய ஐ.டி. நிறுவன ஊழியர்களுக்கு எச்-1பி விசா வழங்குவதிலும் அமெரிக்கா பாரபட்சமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் குடியேற்றத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த நிதியாண்டில் இதுவரை எவ்வளவு பேருக்கு எச்-1பி விசா அனுமதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலின்படி இந்தியாவின் முன்னணி ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களில் வெறும் 4,573 பேருக்கு மட்டும் அமெரிக்காவின் எச்-1பி விசாவுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவாகும். இது 2015-ஐ விட 70 சதவீதம் குறைவு மற்றும் 2024-ல் பெற்றிருந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 37 சதவீதம் குறைவு ஆகும். அதிகபட்சமாக டி.சி.எஸ். நிறுவன ஊழியர்கள் 846 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
டி.சி.எஸ். நிறுவன ஊழியர்களுக்கு கடந்த ஆண்டில் 1,452 பேருக்கும் 2023-ல் 1,174 பேருக்கும் விசா அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் டி.சி.எஸ் நிறுவன ஊழியர்களில் ஏற்கனவே எச்-1பி விசா வைத்திருப்பவர்களின் புதுப்பிப்பு அனுமதி 5,293 பேருக்கு மறுக்கப்பட்டுள்ளது. நேர்மாறாக கூகுள், மெட்டா, மைக்ரோசாப்ட் போன்ற அமெரிக்க நிறுவனங்களில் பணிபுரிவதற்காக விசா வழங்கல் கடந்த நிதியாண்டை காட்டிலும் 2 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.