பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது பெற விண்ணப்பிக்கும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-05-21 17:42 IST

கோப்புப்படம் 

'பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது' பெற விண்ணப்பிக்கும் காலம் அடுத்த மாதம் 20-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண்.110-ன் கீழ் தமிழ்நாடு முதல்-அமைச்சர் 22.04.2025 அன்று பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.

அவ்வறிவிப்பிற்கிணங்க தமிழ் மொழிக்கு பாவேந்தர், தமிழகத்தின் மறுமலர்ச்சிக் கவிஞர் அவர்களைப் போற்றும் வகையில் "தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் 35 வயதிற்கு மேல் 40 வயதிற்குட்பட்ட ஆண் மற்றும் பெண் இளம் எழுத்தாளர் / கவிஞர் என இருவர் தெரிவு செய்யப்பட்டு பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது" வழங்கி விருதுத் தொகை தலா ரூ.1 லட்சம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளது.

அவ்வகையில் பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருதுக்கான விண்ணப்பம் வந்து சேர வேண்டிய இறுதி நாள் 23.05.2025 என ஏற்கனவே செய்தி வெளியிடப்பட்டது. தற்பொழுது விருதுக்கு விண்ணப்பிக்கும் காலம் 20.06.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆண் மற்றும் பெண் இளம் எழுத்தாளர் / கவிஞர் பெருமக்கள் www.tamilvalarchithurai.tn.gov.in/awards மற்றும் http://awards.tn.gov.in என்ற இணையதளங்களின் வழியாகவோ அல்லது www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழுமூர், சென்னை – 600 008. என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவோ, நேரிலோ 20.06.2025-ம் நாளுக்குள் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டுகின்றோம். தக்க ஆவணங்களோடு விண்ணப்பங்கள் அமைதல் விரும்பத்தக்கது.

கூடுதல் விவரமறிய விரும்புவோர் 044-28190412, 044-28190413 ஆகிய தொலைபேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். உரிய நாளுக்குள் (20.06.2025) பெறப்படும் விண்ணப்பங்களே ஏற்றுக் கொள்ளப்படும் என எழுத்தாளர்கள் / கவிஞர்களுக்கு நினைவிற் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்