சென்னை நங்கநல்லூரில் கட்டுவது 2-வது ஹஜ் இல்லமா? - தமிழக அரசு விளக்கம்

சென்னை சூளையில் ஏற்கனவே ஹஜ் இல்லம் செயல்பட்டு வருவதாக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.;

Update:2025-12-17 06:42 IST

சென்னை,

ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்காக தமிழக அரசின் சார்பில் சென்னை விமான நிலையம் அருகே உள்ள நங்கநல்லூரில் ரூ.39.20 கோடி செலவில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டுவதற்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.

இதற்கிடையே சென்னை சூளையில் ஏற்கனவே ஹஜ் இல்லம் செயல்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு அரசு புதிதாக நங்கநல்லூரில் 2-வது ஹஜ் இல்லம் கட்டுவதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருவதோடு, தமிழக அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

இது திரிக்கப்பட்ட தகவல். சென்னை சூளையில் செயல்பட்டு வரும் ஹஜ் இல்லம் தமிழ்நாடு அரசால் நடத்தப்படுவதில்லை. தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் சொசைட்டி என்ற தனியார் அமைப்பால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டியுள்ள ஹஜ் இல்லம் தமிழ்நாடு அரசின் சிறுபான்மை நலத்துறை சார்பில் கட்டப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்