கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
கவர்னர் ஆர்.என்.ரவி ஆரம்பம் முதலே தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக முத்தரசன் தெரிவித்தார்.;
சென்னை,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கவர்னர் ஆர்.என்.ரவி ஆரம்பம் முதலே தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். கவர்னர் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டு வருவதை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தி வருகிறோம். இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தியாகராசர் கல்லூரியில் நடந்த கம்பன் விழாவில் பங்கேற்றார்.
அப்போது, ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கம் எழுப்பியதுடன், அந்த நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களையும் முழக்கம் எழுப்புமாறு நிர்பந்தித்துள்ளார். தமிழ்நாட்டின் பண்புக்கும், கலை, கலாசார மரபுக்கும் எதிராக செயல்படுகிறார். கோர்ட்டு தீர்ப்புகளுக்கும், சட்டத்துக்கும் மேலாக தன்னை கருதி கொள்கிறார். எனவே, கவர்னர் ஆர்.என்.ரவியை ஜனாதிபதியும், மத்திய அரசும் திரும்ப பெற வேண்டும். இதுபோன்ற செயல்கள் தொடருமானால், மக்கள் எழுச்சி அவரை கட்டுப்படுத்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.