சென்னை: மின்சார பஸ்கள் இயக்கப்படும் 11 வழித்தடங்கள் எங்கெங்கு தெரியுமா..?

மின்சார பஸ்களின் ஒவ்வொரு இருக்கையிலும் ‘சீட் பெல்ட்’ செல்போன் ‘சார்ஜிங்’ வசதி செய்யப்பட்டுள்ளது.;

Update:2025-07-01 06:24 IST

சென்னை,

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகமானது எரிபொருள் செலவை கட்டுப்படுத்தும் வகையிலும், சென்னையில் காற்று மாசுபாட்டை கணிசமாக குறைக்கும் வகையிலும், பயணிகளுக்கு கூடுதல் வசதி வழங்கும் வகையிலும் தாழ்தள மின்சார பஸ்களை இயக்க முடிவு செய்தது.

அதன்படி உலக வங்கி உதவியுடன் மொத்த விலை ஒப்பந்தத்தின்படி (ஜி.சி.சி.) ஆயிரத்து 225 மின்சார தாழ்தள பஸ்களை வாங்க முடிவு செய்யப்பட்டது. அதில் முதல்கட்டமாக 625 மின்சார பஸ்களுக்கான ஒப்பந்தமானது அசோக் லேலண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான 'ஓம் குளோபல் மொபிலிட்டி' நிறுவனத்துடன் போடப்பட்டு உள்ளது.

இதில் 400 பஸ்கள் ஏ.சி. அல்லாத பஸ்களும், 225 ஏ.சி. பஸ்களும் அடங்கும். இந்த மின்சார பஸ்களை இயக்குவது மற்றும் பராமரிப்பது 'ஓம் குளோபல் மொபிலிட்டி' நிறுவனம்தான். சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் கண்டக்டர்கள் பணியமர்த்தப்பட்டு டிக்கெட் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருவாய் ஈட்டப்படும். இந்த 625 தாழ்தள மின்சார பஸ்களில் முதல் கட்டமாக 120 மின்சார பஸ்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (திங்கட்கிழமை) சென்னை வியாசர்பாடி பணிமனையில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்.

 

மின்சார பஸ்கள் இயக்கப்படும் 11 வழித்தடங்கள்

1. வழித்தட எண்: 2பி- கவியரசு கண்ணதாசன் நகர்-அண்ணா சதுக்கம்- கவியரசு கண்ணதாசன் நகர் (சுற்று பஸ்) - 10 பஸ்கள்.

2. 18ஏ- பிராட்வே-கிளாம்பாக்கம் - 20 பஸ்கள்

3. சி33- கவியரசு கண்ணதாசன் நகர்-பிராட்வே-கவியரசு கண்ணதாசன் நகர் (சுற்று பஸ்) (செல்லும் போது-மகாகவி பாரதி நகர் வழி, வரும் போது- மூலக்கடை வழி) - 5 பஸ்கள்.

4. சி64- கவியரசு கண்ணதாசன் நகர்-பிராட்வே-கவியரசு கண்ணதாசன் நகர் (சுற்று பஸ்) (செல்லும்போது மூலக்கடை வழி, வரும்போது- மகாகவி பாரதி நகர் வழி) - 5 பஸ்கள்.

5. 37- பூந்தமல்லி-வள்ளலார் நகர் (குமணன்சாவடி வழியாக) - 10 பஸ்கள்.

6. 46ஜி- மகாகவி பாரதி நகர்-கோயம்பேடு (அரும்பாக்கம் வழியாக) - 10 பஸ்கள்.

7. 57- வள்ளலார் நகர்-செங்குன்றம் - 10 பஸ்கள்

8. 57எக்ஸ்- வள்ளலார் நகர்-பெரியபாளையம் - 10 பஸ்கள்.

9. 164இ- பெரம்பூர்-மணலி - 10 பஸ்கள்.

10. 170டி.எக்ஸ்- மகாகவி பாரதி நகர்- கிளாம்பாக்கம் பஸ் நிலையம் (மூலக்கடை, கோயம்பேடு வழியாக) - 20 பஸ்கள்.

11. 170சி- திரு.வி.க.நகர்-கிண்டி திரு.வி.க. எஸ்டேட் (கொளத்தூர், கோயம்பேடு வழியாக) - 10 பஸ்கள்.

 

மின்சார பஸ்சில் வியக்க வைக்கும் சிறப்பு அம்சங்கள்

* பயணிகள் பாதுகாப்புக்காக ஒரு பின்புற கேமரா உள்பட 7 கேமராக்கள் இடம் பெற்றுள்ளன.

* பயணத்தின்போது ஏதேனும் அசாதரண சூழல் ஏற்பட்டால் டிரைவருக்கு தகவலை சட்டென்று தெரிவிக்கும் வகையில் 13 அவசர கால, அவசர நிறுத்த கோரிக்கை சுவிட்சுகள் (பொத்தான்கள்) வைக்கப்பட்டுள்ளன.

* ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளது. எனவே பஸ் நிறுத்தம் தொடர்பான தகவல்கள் ஒலி அறிவிப்பு மூலமாகவும், எல்.இ.டி.திரை மூலமாகவும் பயணிகள் அறிந்துகொள்ளும் வசதி உள்ளது.

* மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக 6 இருக்கைகள் இடம் பெற்றுள்ளன. அவர்கள் சிரமமின்றி பஸ்சில் ஏறும் வகையில் மடக்கும் வசதி கொண்ட சாய்வுதள படிக்கட்டும் இடம் பெற்றுள்ளது.

* பஸ் வேகமாக செல்லும்போது பயணிகள் தடுமாறாமல் இருக்க 'சீட் பெல்ட்'டுடன் ஒவ்வொரு இருக்கையும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

* தொலைதூர அரசு சொகுசு பஸ்கள், 'ஆம்னி' பஸ்களில் இருப்பது போன்று ஒவ்வொரு இருக்கையின் கீழும் செல்போன் 'சார்ஜிங் பாயிண்ட்' நிறுவப்பட்டு உள்ளது.

* பஸ் விபத்தில் சிக்கினால் பயணிகள் உடனடியாக வெளியேறுவதற்கு 2 அவசர கால வழிகள் வைக்கப்பட்டு உள்ளன. மருத்துவ முதலுதவி பெட்டகமும் வைக்கப்பட்டு உள்ளது.

* 2 மணி நேரம் 'சார்ஜிங்' செய்தால் இந்த பஸ் 200 கிலோ மீட்டர் வரை இயங்கும்.

* பஸ்சின் தரை உயரத்தை 400 மில்லி மீட்டரில் 250 மில்லி மீட்டராக குறைக்கும் 'கீலிங்' தொழில்நுட்ப வசதி உள்ளது. இது மழைக்காலத்தில் தேங்கிய தண்ணீரில் பஸ் சிக்கலின்றி செல்வதற்கு வசதியாக இருக்கும்.

* டீசல் மூலம் இயங்கும் மாநகர பஸ் ஒரு கிலோ மீட்டருக்கு தோராயமாக 755 கிராம் 'கார்பன் டை ஆக்சைடை' வெளியிடும். சுற்றுச்சூழலுக்கு மின்சார பஸ்களால் குந்தகம் ஏற்படாது.

 

Tags:    

மேலும் செய்திகள்