முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை பயணம்
மதுரையில் இன்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 25 கிலோ மீட்டர் தூரம் ‘ரோடு ஷோ' சென்று பொதுமக்களை சந்திக்கிறார்.;
மதுரை,
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நாளை(1-ந் தேதி) மதுரையில் நடைபெறுகிறது. இதையொட்டி உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் கடந்த ஒரு மாதமாக மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான மூர்த்தி மேற்பார்வையில் நடந்து வருகிறது.
இதில் பொதுக்குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை கழக நிர்வாகிகள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். 90 ஏக்கர் உள்ள இந்த திடலில் குளு, குளு ஏ.சி. வசதியும் செய்யப்பட்டு உள்ளது. உள்புறம் வண்ண வண்ண விளக்குகள் ஜொலிக்கின்றன.
சென்னை அண்ணா அறிவாலயம் போன்ற முகப்புத்தோற்றத்துடன் பொதுக்குழு நடைபெறும் அரங்கின் நுழைவு வாயில் அமைக்கப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி பெரியார், அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்களும், தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் பதாகைகளும் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் அரங்கின் முன்பு 100 அடி உயரத்தில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் பசுமையான புல்வெளிகள், பூத்துக்குலுங்கும் வண்ணமலர்களுடன் செயற்கை நீருற்றும் இடம்பெறுகிறது.
தி,மு.க. பொதுக்குழுவில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் 1 மணி அளவில் மதுரை வருகிறார். விமான நிலையத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி, தளபதி எம்.எல்.ஏ., மணிமாறன் தலைமையில் தி.மு.க.வினர் பிரமாண்டமான வரவேற்பு கொடுக்கிறார்கள். பின்னர் அவர் கார் மூலம் விமான நிலையம் அருகே உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று ஓய்வெடுக்கிறார்.
மாலையில், அங்கிருந்து கார் மூலம் அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியில் உள்ள மருதுபாண்டியர் சிலை பகுதிக்கு வருகிறார். அங்கிருந்து முதல்-அமைச்சர் பங்கேற்கும் பிரமாண்டமான ரோடு ஷோ சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடக்கிறது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பல ஆயிரக்காணக்கான மக்கள் பங்கேற்க செய்வதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் மூர்த்தி செய்து வருகிறார்.
இந்த ரோடுஷோ வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம், ஜீவாநகர், சுந்தரராஜபுரம் மார்க்கெட், டி.வி.எஸ்.நகர் சுரங்க பாதை வழியாக பழங்காநத்தம், வ.உ.சி.பாலம், எல்லீஸ்நகர் 70 அடி ரோடு, பை-பாஸ் ரோடு, பொன்மேனி, காளவாசல், குருதியேட்டர், ஆரப்பாளையம் பஸ் நிலையம், ஜல்லிக்கட்டு ரவுண்டனா, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு வழியாக மேயர் முத்து சிலை பகுதிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு புதிதாக அமைக்கப்பட்ட முன்னாள் மேயர் முத்துவின் வெண்கல சிலையை முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார்.
ரோடுஷோ செல்லும் வழியில் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் நடைபயணமாக சென்று பொதுமக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க இருக்கிறார்.. அப்போது ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோவிலில் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
பின்னர் நாளை (1-ந் தேதி) நடைபெறும் பொதுக்குழு கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. பல்வேறு முக்கிய அறிவிப்புகளை மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுவது குறித்து பல்வேறு அமைச்சர்கள் நேரில் வந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.