கரூரில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி கடத்தல்
கரூரில் பட்டப்பகலில் கல்லூரி மாணவியை மர்ம நபர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
கோப்புப்படம்
கரூர் அரசு கலைக் கல்லூரியில் ஈசநத்தம் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிஏ ஹிஸ்டரி படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று மதியம் சுமார் 12 மணியளவில் மாணவி பேருந்தில் இருந்து இறங்கி சக மாணவிகளுடன் கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை பின்தொடர்ந்து ஆம்னி வேனில் வந்த மர்ம நபர்கள் சிலர் அந்த மாணவியை கடத்திச் சென்றனர்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாந்தோணிமலை போலீசார் சக மாணவி ஒருவரிடம் மேற்கொண்ட விசாரணையில், "கடத்தப்பட்ட கல்லூரி மாணவியை பக்கத்து ஊரைச் சேரந்த இளைஞர் ஒருவர், ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
மாணவி அவரை காதலிக்க மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், அந்த இளைஞர் இன்று நண்பருடன் ஆம்னி வேனில் வந்து மாணவியை வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்திச் சென்றுள்ளார்" என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர். கரூரில் பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து கல்லூரி மாணவியை மர்ம நபர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.