தொடர் மழை.. பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு
118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 94 அடியாக உள்ளது.;
நெல்லை,
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. நேற்றும் மலைப்பகுதியில் கனமழை கொட்டியது. நெல்லை மாநகர பகுதியில் நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. மதியம் 2 மணியளவில் சிறிது நேரம் மழை பெய்தது. டவுன், சந்திப்பு, என்.ஜி.ஓ. காலனி, கே.டி.சி. நகர், மேலப்பாளையம், தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் காரையாறு அணை நீர்மட்டம் நேற்று மேலும் 5 அடி உயர்ந்து 130.20 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, வினாடிக்கு 5,223 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்துக்கு 1,400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனுடன் இணைந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் 7 அடி உயர்ந்து 142.12 அடியாக உள்ளது.
118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 94 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 619 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு 45 கன அடியில் இருந்து 75 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
தென்காசி அணைகள்
தென்காசி மாவட்டத்தில் உள்ள ராமநதி, குண்டாறு அணைகள் ஏற்கனவே நிரம்பி விட்டதால், அணைகளுக்கு வருகிற தண்ணீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. 85 அடி உயரம் கொண்ட கடனாநதி அணை நீர்மட்டம் மேலும் 5 அடி உயர்ந்து 75 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 691 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
72 அடி உயரம் கொண்ட கருப்பாநதி அணை நீர்மட்டம் 67 அடியாக உள்ளது. 132 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் 3¼ அடி உயர்ந்து 112 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 117 கன அடியாக அதிகரித்து உள்ளது.
மழை அளவு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
பாபநாசம் -17, சேர்வலாறு -6, மணிமுத்தாறு -1, கொடுமுடியாறு -11, நம்பியாறு -5, சேரன்மாதேவி -1, நாங்குநேரி -2, ராதாபுரம் -4, களக்காடு -1, மாஞ்சோலை -22, காக்காச்சி -30, நாலுமுக்கு -45, ஊத்து -38.
கடனா -10, ராமநதி -12, கருப்பாநதி -7, குண்டாறு -18, அடவிநயினார் -36, செங்கோட்டை -13, சிவகிரி -3.