புயல் முன்னெச்சரிக்கை: அரசு முழு வீச்சுடன் செயல்பட்டு வருகிறது - உதயநிதி ஸ்டாலின்
புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார்.;
சென்னை,
டிட்வா புயல் சென்னையில் நெருங்கி வரும் நிலையில், எழிலகம் பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசியதாவது;
”புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மழை பெய்யும் பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள மீட்பு நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளோம். சமூக வலைதளங்கள் மூலம் புகார்கள், தொலைபேசி மூலம் வரும் புகார்களையும் ஆய்வு செய்துள்ளோம். உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் சென்னைக்கு தென்கிழக்கே நிலைகொண்டுள்ளது.
தமிழக கடலோர மாவட்டங்கள் வழியாக புயல் நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாகையில் அதிகபட்சமாக 30 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மாநில பேரிடர் மீட்புப்படையினர் 16 குழுக்கழும், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் 12 குழுக்களும் கடலோர மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. உயிரிழப்பை தவிர்க்க அரசு முழு வீச்சுடன் செயல்பட்டு வருகிறது.”
இவ்வாறு அவர் கூறினார்.