காட்டுப்பன்றிக்காக வைத்த மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள பகுதியில் காட்டுப்பன்றிகள் அதிக அளவில் நடமாடுவதால் பயிர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.;

Update:2025-11-30 06:37 IST

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் அருகே ஆத்திகுளம் சுடலை மாடசாமி சுவாமி கோவில் தெருவை சேர்ந்த சிவனுகோனார் மகன் வடிவேல் (வயது 60). இவர் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் 5 ஏக்கர் நிலத்தில் மக்காச்சோளம் பயிர் விவசாயம் செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தோட்டத்திற்கு சென்று மக்காச்சோளப் பயிரில் தண்ணீர் பெருகி இருக்கிறதா என்று பார்ப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது வேலியில் மின் இணைப்பு கொடுத்ததை மறந்து அந்த கம்பியில் மிதித்துள்ளார். அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது மனைவி தனது கணவர், வீட்டிற்கு வெகு நேரமாகியும் வரவில்லையே என நினைத்து தோட்டத்திற்கு சென்று பார்த்த போது அங்கு அவர் மின்சாரம் தாக்கியதில் இறந்தது தெரியவந்தது. உடனே வீட்டிற்கு சென்று உறவினர்களிடம் கூறவே அவர்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் அவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன வடிவேலுக்கு சுப்புத்தாய் என்ற மனைவியும் 5 மகள்களும் உள்ளனர். காட்டுப்பன்றிக்காக வைத்த மின் வேலியில் சிக்கி விவசாயி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகததை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பகுதியில் காட்டுப் பன்றிகள் அதிக அளவில் நடமாடுவதால் பயிர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. ஒரு பெண் உட்பட 4 பேர் பன்றிகள் கடித்து காயம் அடைந்துள்ளனர். இந்த பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட பன்றிகள் திரிவதால் பாதுகாப்பு இல்லாமல் பயிர் செய்ய முடியவில்லை. ஆகவே தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பகுதியில் சுற்றித் திரியும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த கோரி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்