கடலூரில் பரபரப்பு: வாகனம் நிறுத்துவதில் தகராறு.. நெசவு தொழிலாளி அடித்துக் கொலை

வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியதால் ஏற்பட்ட தகராறில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.;

Update:2025-08-24 12:28 IST


கடலூர் கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் மனோகர் (வயது 54). நெசவு தொழிலாளியான இவர் வண்டிப்பாளையத்தில் உள்ள தனியார் நெசவு பட்டறையில் வேலை பார்த்து வந்தார். மனோகர், வேலைக்கு செல்லும் போது தனது மோட்டார் சைக்கிளை நெசவு பட்டறை அருகில் உள்ள கந்தன் என்பவரது வீட்டின் அருகே நிறுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இதுதொடர்பாக மனோகருக்கும், கந்தனுக்கும் இடையே கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மனோகர் வழக்கம் போல் வேலைக்கு வந்தார்.

இந்த நிலையில் மாலை 4.30 மணியளவில் மீண்டும் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கந்தன், கார்த்திகேயன் உள்ளிட்ட 3 பேர் சேர்ந்து மனோகரை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மனோகர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கந்தன் உள்ளிட்ட 3 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டின் முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியதால் ஏற்பட்ட தகராறில் நெசவு தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்