ரூ.44 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

வனக் காவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.;

Update:2025-06-05 15:45 IST

சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் இன்று நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில், சென்னை, கிண்டியில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டி, தமிழ்நாடு கடல்சார் மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக 1.75 கோடி ரூபாய் செலவில் 14 கடலோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கைவிடப்பட்ட மீன்பிடி வலைகள் சேகரிப்பு மையங்களை திறந்து வைத்து, தனுஷ்கோடியில் பெரும் பூநாரை பறவைகள் சரணாலயம் அறிவிக்கை பற்றிய குறும்படத்தையும் பார்வையிட்டார். மேலும், 1,400 வனக் காவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாகச் செயல்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள், வனக் காவலர்கள், நீர் நிலைப்பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வலர்கள் ஆகியோருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

மனிதகுலம் சந்தித்துவரும் பெரும் சவாலாக தற்போது காலநிலை மாற்றம் உள்ளது. அதனை எதிர்கொள்ள இவ்வரசு பசுமைத் தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநில இயக்கம், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் ஆகிய இயக்கங்களை தொடங்கி சிறப்பாக செயல்படுத்தி வருவதோடு, இயற்கைப் பாதுகாப்பினையும் வளங்குன்றா வளர்ச்சியையும் தொடர்ந்து வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பயன்பாட்டை ஒழித்திட உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதுடன், தமிழ்நாட்டின் பாரம்பரியமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த துணிப்பை பயன்பாட்டை மீட்டெடுக்கும் வகையில் "மீண்டும் மஞ்சப்பை" திட்டத்தை அறிமுகப்படுத்தி மக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் தமிழ்நாடு மீன் வலை முன்னெடுப்பின் கீழ், சென்னை காசிமேட்டில் நிறுவப்பட்டுள்ள கைவிடப்பட்ட மீன்வலை சேகரிப்பு மையம் மூலம் கைவிடப்பட்ட மீன் வலைகள் மறுசுழற்சிக்கு அனுப்பப்படுவதால் கடலில் நெகிழி மாசுபாடு குறைந்து, கடல் பல்லுயிரியம் பாதுகாக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை பேணிக் காத்திட இவ்வரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சரால் இன்றையதினம் அடிக்கல் நாட்டப்பட்டது.

இம்மையத்திற்கான கட்டடம் சுற்றுச்சூழலுக்கு சாதகமான மற்றும் இயற்கை வளங்களை திறம்பட பயன்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய பசுமை கட்டடமாக உருவாக்கப்படும். இக்கட்டடத்தின் மொத்த நிலப்பரப்பு 16,555 சதுர அடி மற்றும் மொத்த கட்டுமானப் பரப்பளவு 46,823 சதுர அடி ஆகும். சுற்றுப்புற காற்றின் தரத்தை நிகழ்நேரத்தில் கண்காணித்தல், தொழிற்சாலை உமிழும் கழிவு வாயு, கழிவுநீர் கண்காணிப்பு, உயிரி மருத்துவ கழிவுகள் மற்றும் அபாயகரமான கழிவுகள் எடுத்துச் செல்லப்படுவதை கண்காணித்தல், ஆகியவற்றுடன் ஓர் மேம்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வகம் மற்றும் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் ஆகியவை இம்மையத்தில் நிறுவப்படும்.

தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கைவிடப்பட்ட மீன்பிடி வலைகள் சேகரிப்பு மையங்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்றையதினம் திறந்து வைத்தார். தமிழ்நாட்டின் கடலோரங்களில், கடலில் கைவிடப்படும் மீன்வலைகள் மற்றும் நெகிழி கழிவுகள், கடல் உயிர்வளம் மற்றும் கடல்சார் சூழலுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இந்நிலையில், கடல்சார் நெகிழி மாசுபாட்டை எதிர்கொள்ளும் முயற்சியாக, இந்தியாவிலேயே முதன்முறையாக, "தமிழ்நாடு மீன்வலை முயற்சிகள்" என்ற திட்டத்தின் கீழ், 2024 ஆகஸ்ட் 14-ம் தேதி காசிமேட்டில் "கைவிடப்பட்ட மீன்பிடி வலை சேகரிப்பு மையத்தினை" முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

கடலில் கைவிடப்படும் மீன்வலைகளை சேகரித்து, மீனவர்களின் பங்கேற்புடன் அவற்றை மறுசுழற்சி செய்வது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மேலும், மீனவர்கள் சேகரிக்கும் ஒவ்வொரு கிலோ கைவிடப்பட்ட மீன்வலைக்கும், அவர்களுக்கு ரூ.40 முதல் ரூ.46 வரை வழங்கப்படுகிறது. இதில், ரூ.4 முதல் ரூ.6 வரை ஊக்கத்தொகையும் அடங்கும். இதன்மூலம், மீனவர்களுக்கு கூடுதல் வருமான வாய்ப்பும் அளிக்கப்படுகிறது. இதுவரை, 17,044 கிலோவுக்கும் அதிகமான கைவிடப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள், கடலுக்குள் செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது. 10,700 கிலோ கைவிடப்பட்ட மீன்பிடி வலைகள் மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளன.

சென்னை, காசிமேட்டில் தொடங்கிய இம்முயற்சியின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் 13 கடலோர மாவட்டங்களான – திருவள்ளூர் மாவட்டம் - பழவேற்காடு கிராமம், சென்னை மாவட்டம் – பட்டினப்பாக்கம் கலங்கரைவிளக்கம் அருகில், செங்கல்பட்டு மாவட்டம் – கோவளம், விழுப்புரம் மாவட்டம் – கூனிமேடு கிராமம், கடலூர் மாவட்டம் – முடசல் ஓடை மீன்பிடி நிலையம், மயிலாடுதுறை மாவட்டம் – பழையார் மீன்பிடி துறைமுகம், நாகப்பட்டினம் மாவட்டம் – நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகம், திருவாரூர் மாவட்டம் – முத்துபேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் – மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுக வளாகம், புதுக்கோட்டை மாவட்டம் – கோட்டைப்பட்டினம் மீன்பிடி நிலைய வளாகம், ராமநாதபுரம் மாவட்டம் – ஏர்வாடி கிராமம், தூத்துக்குடி மாவட்டம் – தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம், திருநெல்வேலி மாவட்டம் – உவரி கடற்கரையில் ஏல மண்டபம், கன்னியாகுமரி மாவட்டம் – சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் ஆகிய 14 கடலோர மாவட்டங்களில், உலக வங்கியின் "தமிழ்நாடு கடல்சார் மேம்பாட்டு திட்டம்" (TN SHORE) மூலமாக, 1.75 கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த விரிவாக்கம், தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய கடலோர மாவட்டங்களையும் உள்ளடக்கியதாகும். இது நம் கடல்களின் பாதுகாப்பையும், மீனவர்களின் நலனையும் ஒருசேர முன்னேற்றும் ஒரு மாபெரும் திட்டமாகும்.

இவ்விழாவில், ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடியில் அமைக்கப்பட்டுள்ள பெரும் பூநாரை பறவைகள் சரணாலயம் (Greater Flamingo Bird Sanctuary) பற்றிய குறும்படத்தினை முதல்-அமைச்சர் இன்று பார்வையிட்டார்.

தனுஷ்கோடி பெரும் பூநாரைகள் சரணாலயம், பல்லுயிர் வளம் மிகக் கொண்ட மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத்தில் 524.78 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. ராமேஸ்வரம் தீவின் கடைகோடியில் உள்ள சதுப்பு நிலங்களில் அமைந்துள்ள இந்த சரணாலயம் பெரும் பூநாரைகள் உள்ளிட்ட வலசை பறவைகள் இடம் பெயர்வதற்கான மத்திய ஆசிய பறவைப் பாதையின் முக்கியப் பகுதியாகும்.

இந்த சரணாலயம் புலம் பெயர்ந்த ஈர நில பறவைகளுக்கான வலசைப் பாதையிலும் அமைந்துள்ளது. இங்கு நிலப்பரப்பினைச் சார்ந்த 55 வகையான பறவை இனங்களும், நிலப்பரப்பினைச் சாராத புலம் பெயர்ந்த 73 பறவை இனங்களும் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் மார்ச் வரை 700 பூநாரைகள் மற்றும் 4,300 அலைந்து திரியும் பறவை இனங்கள் இங்கு வருகை புரிகின்றன. இந்த சரணாலயம் அமைக்கப்படுவதன் மூலம் இந்த உயிர்க்கோளக் காப்பகத்தின் பல்லுயிர் சமநிலை பாதுகாக்கப்படுவதுடன், இங்கு வருகைபுரியும் பறவை இனங்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.

இவ்வரசு பொறுப்பேற்ற பிறகு அறிவிக்கை செய்யப்படும் மூன்றாவது பறவைகள் சரணாலயம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையும் சேர்த்து தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 18 பறவைகள் சரணாலயங்கள் உள்ளன.

வனங்களை காத்து வளர்த்திட வனத்துறைக்கு போதுமான பணியாளர்கள் தேவை. அதனை பூர்த்தி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் வனக் காவலர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 1,400 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் வழங்கினார். இதன்மூலம் வனத்துறையின் செயல்பாடுகள் மேலும் செம்மையுறும்.

மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றியதற்காக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் சி.தினேஷ் குமார், தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.பிரதீப் குமார், மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.பிரதாப் ஆகியோருக்கு பசுமை விருதுகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.

மேலும், மனித வனவிலங்குகள் முரண்பாடு மேலாண்மை, பசுமை தமிழ்நாடு இயக்கம், நீடித்த நிலைத்த வன மேலாண்மை ஆகிய பிரிவுகளில் சிறப்பாகச் செயல்பட்ட விழுப்புரம், கரூர், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருவாரூர் ஆகிய ஐந்து மாவட்ட வன அலுவலர்களுக்கு சிறந்த மாவட்ட வனப் பாதுகாவலர் விருதுகள்; தூத்துக்குடி, முத்துப்பேட்டை, மொரப்பூர், திருச்சிராப்பள்ளி மற்றும் போளுவாம்பட்டி ஆகிய சரகங்களைச் சார்ந்த ஐந்து வனச் சரகர்களுக்கு சிறந்த வனச்சரகர்களுக்கான விருதுகள் முதல்-அமைச்சரால் வழங்கப்பட்டன.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நீர் நிலைப்பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட 38 நபர்களுக்கு முதல்-அமைச்சரின் நீர்நிலைப் பாதுகாவலர் விருதுகள் மற்றும் தலா 1 லட்சம் ரூபாய்க்கான பரிசுத்தொகை மற்றும் ஐந்து தொழிற்சாலைகளுக்கு தன்னார்வ பசுமைத் தரவரிசைக்கான விருதுகள் ஆகிய விருதுகளை முதல்-அமைச்சர் விருதாளர்களுக்கு வழங்கி வாழ்த்தினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்