கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த தமிழறிஞர் ஈரோடு தமிழன்பன் உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார்.;
சென்னை,
மூத்த தமிழறிஞரும், கவிஞருமான ஈரோடு தமிழன்பன் மூச்சுத்திணறல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அவர், சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 92.
மரணமடைந்த ஈரோடு தமிழன்பன் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள இல்லத்துக்கு எடுத்து செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு சென்னை அரும்பாக்கம் மின் மயானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதைபோல துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல்துறை மறியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கவிஞர் ஈரோடு தமிழன்பன் தனது இறுதிக்காலம் வரையிலும் பல வகைமைகளிலும் தமிழுக்குத் தொண்டாற்றிய நீண்ட நெடிய பெருவாழ்வுக்குச் சொந்தக்காரர். அவரின் தமிழ் தெண்டினை கௌரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.