‘கவர்னர் ஆர்.என்.ரவி தி.மு.க. அரசின் ஊழலுக்கு மிகப்பெரிய தடையாக உள்ளார்' - எல்.முருகன்
கவர்னர் மீது தி.மு.க. அரசு தேவையில்லாத வன்மத்தை திணித்து வருகிறார் என்று எல்.முருகன் விமர்சித்துள்ளார்.;
கோவை,
மத்திய மந்திரி எல்.முருகன் நேற்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வி.ஐ.பி. நகரில் உள்ள தனது முகாம் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு பா.ஜனதா கட்சியின் கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்ட முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பூத் கமிட்டிகள் அமைப்பது, வருகிற சட்டமன்ற தேர்தலை கூட்டணி கட்சிகளுடன் இணைந்து எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
“மேட்டுப்பாளையம் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பைபாஸ் சாலை அமைப்பது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்காரியிடம் பேசி உள்ளேன். அதற்கான ஆய்வும் நடைபெற்று விட்டது. விரைவில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தி.மு.க. அரசின் ஊழலுக்கு மிகப்பெரிய தடையாக உள்ளார். இதனால் அவரை எதிரியாக சித்தரிக்கிறது. அவர் சிறப்பாக பணி செய்து வருகிறார். தி.மு.க. அரசு, அவர் மீது தேவையில்லாத வன்மத்தை திணித்து வருகிறது. தி.மு.க. அரசுக்கு ஆதரவாக செயல்பட்டால் நல்லவர்கள் என்றும், இல்லையென்றால் கெட்டவர்கள் என்றும் தி.மு.க. அரசு நினைக்கிறது.
தி.மு.க.விற்கு எதிராக இருப்பதாக தனியார் தொலைக்காட்சிகளை அரசு கேபிளில் இருந்து முடக்குவது, சமூக வலைத்தளங்களில் தி.மு.க.விற்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை இரவோடு, இரவாக கைது செய்வது போன்றவை கருத்து சுதந்திரத்தை முடக்கிய 1975-ம் ஆண்டு எமர்ஜென்சி காலத்தை நினைவுபடுத்துகிறது. கரூர் சம்பவம் குறித்து விசாரணை அறிக்கை வெளிவரும் முன்பாக அதுகுறித்து அரசியல் ரீதியாக கருத்து கூற விரும்பவில்லை. கூட்டணி குறித்து தற்போது தெரிவிக்க எதுவும் இல்லை.”
இவ்வாறு அவர் கூறினார்.