தடையை மீறி கல்லத்தி மரத்துக்கு செல்ல முயற்சி: திருப்பரங்குன்றத்தில் எச்.ராஜா கைது
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள மரத்தில் கட்டப்பட்ட தர்கா கொடியை அகற்றும்படி தர்ணாவில் ஈடுபட்ட எச்.ராஜா உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.;
மதுரை,
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விசுவநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று மாலையில் பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா வந்தார். பின்னர் அவர் தனது ஆதரவாளர்களுடன் மலையில் ஏறி சென்றார். அப்போது கல்லத்தி மரம் உள்ள இடத்திற்கு செல்ல முயன்றார். ஆனால் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் எச்.ராஜாவை தடுத்து நிறுத்தி அங்கு செல்லக்கூடாது எனக்கூறினர். இருப்பினும் அவரும், உடன் வந்த பா.ஜனதாவினர் மலை பாதையில் ஏற முயன்றனர்.
போலீசார் அவர்களை மலை பாதையில் ஏறவிடாமல் கயிறு கட்டி தடுத்தனர். இதனால், போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் கல்லத்தி மரத்தில் கட்டிய கொடியை அகற்றுங்கள் அல்லது அப்பகுதிக்கு எங்களை அனுமதியுங்கள் என்று கேட்டார். அதற்கு போலீசார் மறுத்தனர்.
இதையடுத்து எச்.ராஜா மற்றும் பா.ஜனதாவினர் மலை பாதையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் போராட்டம் நீடித்தது. அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டனர்.இதை தொடர்ந்து மாலை 6.45 மணி அளவில் எச்.ராஜா மற்றும் பா.ஜனதாவினரை போலீசார் மலையில் இருந்து கீழே அழைத்து வந்தனர். பின்னர் மலை அடிவாரம் பழனியாண்டவர் கோவில் வளாகத்தில் போலீஸ் வேன் கொண்டு வரப்பட்டது. அப்போது எச்.ராஜா மற்றும் மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம், திருப்பரங்குன்றம் தொகுதி பொறுப்பாளர் ராக்கப்பன் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.