ரேசன் கடையில் பொங்கல் பரிசு வாங்க சென்றபோது தகராறு: கைரேகை எந்திரத்தை தூக்கி சென்றவரால் பரபரப்பு

பொங்கல் பரிசு ரொக்கத் தொகை கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த நபர் கைரேகை எந்திரத்தை தூக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2026-01-12 20:18 IST

கோப்புப்படம் 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். கட்டிட தொழிலாளி. இவரது முதல் மனைவி மூக்கம்மாள். இவர்களுக்கு சூர்யா என்ற மகன் உள்ளார். மூக்கம்மாள் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதனிடையே மகாலட்சுமி என்பவரை ரமேஷ் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். சூர்யா தனது தாத்தாவுடன் தனி வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் ரமேஷ் தனது 2-வது மனைவி மகாலட்சுமியுடன் அப்பகுதியில் உள்ள ரேசன் கடைக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்கு சென்றுள்ளார். டோக்கனை கொடுத்து விற்பனையாளரிடம் பரிசு தொகுப்பை கேட்டுள்ளார். அப்போது, ஏற்கனவே பொங்கல் பரிசு தொகுப்பை உங்களது மகன் சூர்யா வாங்கி சென்று விட்டதாக விற்பனையாளர் தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், மகாலட்சுமி இருவரும் விற்பனையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் ரேசன் கடையிலிருந்த கைரேகை வைக்கும் எந்திரத்தை கையில் எடுத்தனர். மேலும் இந்த எந்திரம் இருந்தால் தானே எல்லாருக்கும் பணம் கொடுப்பாய் என்று கூறி அவதூறாக பேசிவிட்டு எந்திரத்தை தங்களது வீட்டுக்கு தூக்கி சென்று விட்டனர்.

பின்னர் சிறிது நேரம் கழித்து எந்திரத்தை கொண்டு வந்து கடையில் கொடுத்த ரமேஷ், கடை ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக கடை ஊழியர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி அரசு ஊழியரை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து, எந்திரத்தை தூக்கி சென்றதாக ரமேஷ், மகாலட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ரமேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்