பீகார் எம்.பி.யின் இரு கைகளிலும் வாக்கு செலுத்தியதற்கான மை இருந்தது எப்படி.?
பீகார் எம்.பி.யின் கைகளிலும் வாக்களித்ததற்கான மை இருந்தது சர்ச்சையாகியது.;
பாட்னா,
பீகாரில் முதற்கட்ட சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ந்தேதி நடந்தது. அப்போது, பாஜக கூட்டணியில் இடம்பெற்ற மத்திய மந்திரி சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த எம்.பி ஷாம்பவி சவுத்ரியின் 2 கைகளிலும் வாக்களித்ததற்கான மை இருந்தது சர்ச்சையாகியது. சமஸ்திபூர் மக்களவைத் தொகுதி எம்.பி ஷாம்பவி சவுத்ரி வாக்களித்துவிட்டு ஊடகங்களுக்கு போஸ் கொடுத்தபோது முதலில் தனது வலது கையை உயர்த்தி, மை பூசப்பட்ட விரலை வெளிப்படுத்தி, பின்னர் சிறிது நேரதில் இடது கையைக் காட்டினார். அந்த விரலிலும் மை அடையாளம் இருந்தது. இது ஷாம்பவி இரண்டு முறை வாக்களித்தாரா என்ற கேள்வியை எழுப்பியது.
இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவர் விளக்கமளித்தபோது, வாக்குச்சாவடி அதிகாரி தவறுதலாக என் வலது கையில் மை பூசிவிட்டார், தலைமை அதிகாரி, ஊழியர்களிடம் இடது கையில் பூசச் சொன்னார். அதனால்தான் என் இரண்டு விரல்களிலும் மை அடையாளங்கள் உள்ளன. பெரிய தேர்தல்களின்போது இதுபோன்ற சிறிய நடைமுறை பிழைகள் சாதாரணம், இந்தப் பிரச்னையை அரசியல் சர்ச்சையாக மாற்ற வேண்டாம் என்று தெரிவித்தார்.