மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை இணைத்து பதிவிட்ட பதிவுகளை நீக்கி விடுகிறேன் - ஜாய் கிரிசில்டா

ஜாய் கிரிசில்டா பதிவால் ரூ.12 கோடி வர்த்தக இழப்பு ஏற்பட்டதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.;

Update:2026-01-13 12:24 IST

சென்னை,

பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜாய் கிரிசில்டா சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தை மாதம்பட்டி ரங்கராஜுடையதுதான் என்றும், இதனை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனைக்கும் தயார் என்றும் தெரிவித்து இருந்தார். இந்த சூழலில் ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. தனக்கு எதிராக அவதூறு பரப்ப ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கில் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனிடையே ஜாய் கிரிசில்டா வெளியிட்ட புகார் மற்றும் சமூக வலைதள பதிவுகளால் தங்களது நிறுவனத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதாக மாதம்பட்டி ரங்கராஜின் தந்தை நடத்தி வரும் மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் குற்றச்சாட்டு முன்வைத்தது. ஜாய் கிரிசில்டா பதிவால் ரூ.12 கோடி வர்த்தக இழப்பு ஏற்பட்டதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பாக நடந்த வழக்கு விசாரணையின்போது ரங்கராஜுக்கு எதிரான பதிவுகளில், தேவையில்லாமல், தங்கள் நிறுவனத்தின் பெயரை இணைத்ததால், நிறுவனத்திற்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை இணைத்து பதிவிட்ட பதிவுகளை நீக்கி விடுவதாக ஜாய் கிரிசில்டா உறுதி அளித்துள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில், ஜாய் கிரிசில்டா தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டதன் காரணமாக இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்