திருப்புவனம் காவல் மரணத்தில் உடனடி நடவடிக்கை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பாஜகவின் பண்பாட்டு போரை எதிர்கொள்ள நெஞ்சுரம் மிக்க அரசியல் சக்தி தேவை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;

Update:2025-07-01 12:43 IST

சென்னை,

சென்னை அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற உறுப்பினர் சேர்க்கை மற்றும் பிரசார இயக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இந்த இயக்கத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் திமுக நிர்வாகிகள் வீடு வீடாக பொதுமக்களை சந்திக்கவுள்ளனர்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

தமிழகத்தில் இன்று மிக முக்கியமான நாள். இன்றைய தினம் (ஜூலை 1) தொடங்கி, 45 நாட்கள் ஓரணியில் தமிழ்நாடு' என்ற முன்னெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். ஜூலை 2 (நாளை) தமிழ்நாட்டில் உள்ள 76 மாவட்டக் கழகங்களிலும் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற தலைப்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். ஜூலை 3 முதல் தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்க திட்டமிட்டுள்ளோம்.

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மூத்த நிர்வாகிகள் எல்லோரும் அவரவர் சொந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் செல்ல இருக்கிறார்கள். தொகுதிவாரியாக 68,000 வாக்குச்சாவடிகளில் உள்ள பூத் டிஜிட்டல் ஏஜெண்ட்களுக்கும் பயிற்சி தரப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பிருக்கிறது. தேர்தல் தேதி அறிவித்த பிறகு தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடக்கும். திருப்புவனம் வாலிபர் காவல் மரண வழக்கில் தகவல் தெரிந்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; மேல் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்குவதில்லை; மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசே நிதி ஒதுக்கீடு செய்கிறது. அரசியல், பண்பாடு, மொழி என அனைத்திலும் மத்திய பாஜக அரசு நமக்கு எதிராக செயல்படுகிறது

தமிழ்நாடு இன்று எதிர்கொள்வது அரசியல் பிரச்சினைகளை அல்ல; உரிமைப் பிரச்சினையை; பாஜகவின் பண்பாட்டு போரை எதிர்கொள்ள நெஞ்சுரம் மிக்க அரசியல் சக்தி தமிழகத்திற்கு தேவை. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரின் வீட்டுக்கும் "நேரடியாக செல்லவிருக்கிறோம். எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கும் செல்வேன். அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது ஒருங்கிணைப்பு. கட்சி எல்லைகளை தாண்டி தமிழ்நாட்டின் பிரச்சினைகளுக்கு நாம் ஓரணியில் நிற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்