கோவிலுக்கு தானமாக கொடுத்த காளை, கன்றுக்குட்டியை கூறு போட்ட சம்பவம் - இந்து முன்னணி மாநிலத் தலைவர் கண்டனம்

கோவிலுக்கு தானமாக கொடுத்த காளை மாடு மற்றும் கன்றுக்குட்டியை திருடிச் சென்று வெட்டி கூறு போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2025-11-01 13:30 IST

சென்னை,

கோவிலுக்கு தானமாக கொடுத்த காளை மாடு மற்றும் கன்றுக்குட்டியை திருடிச் சென்று வெட்டி கூறு போட்ட சம்பவத்திற்கு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட காளை மாட்டையும், கன்றுக் குட்டியையும் மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

வேற்று மதத்தைச் சேர்ந்த அந்த நபர் காளை மாட்டையும், கன்றுகளையும் வெட்டி கூறு போட்டு மாமிசமாக விற்றுள்ளார். இவரைப் போன்றவர்களின் இச்செயல்கள் தான் மத மோதலை உருவாக்குகிறது.

இந்த செயலில் ஈடுபட்ட அந்த மர்ம நபர் தொடர்ந்து கோட்டை மாரியம்மன் கோவிலுக்குள் சென்று அந்த காளை மாட்டை கவனிப்பது போல் கவனித்து, உணவளிப்பது போல் வேவு பார்த்து அதை திருடிச் சென்றுள்ளார்.

மேற்படி இந்த திருட்டுச் சம்பவம் அந்த காளை மாட்டின் உரிமையாளர் தானமாக கொடுத்தவர் பார்க்க வந்த பொழுது தான் தெரிந்திருக்கின்றது. அதிர்ச்சியடைந்த அந்த பக்தர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து அழுத்தம் கொடுத்து போராட்ட அறிவிப்பை அவர் செய்ததன் காரணமாக காவல்துறை வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட அந்த நபரை தேடி வருவதாகச் சொல்கிறது. இன்னும் அவரை கண்டுபிடித்து கைது செய்யவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

கோவிலுக்கு தானமாக வழங்கப்படும் பசுமாடுகளோ, மின்சாதன விளக்குகளோ, பணமோ, இடமோ, நகையோ எவையாக இருந்தாலும் அதை நாங்கள் பாதுகாக்கிறோம் என்று அறநிலையத்துறையானது மார்தட்டிக் கொள்கின்றது. ஆனால் தானமாக கொடுத்தவர் வந்து பார்த்து புகார் அளிக்கும் வரை அறங்கெட்ட துறை தூக்கத்தில் இருந்திருக்கிறது. அல்லது கண்டு காணாமல் இருந்திருக்கின்றது.

தற்போது திருடிச் செல்லப்பட்ட காளை மாடு மட்டுமல்லாமல், இதற்கு முன் இதே நபர் இதுபோன்று பல முறை மாடுகளை கடத்திச் சென்றுள்ளதாக தெரிகின்றது. அப்படி என்றால் அறநிலையத்துறை இதை தீவரமாக கவனத்தில் எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்காதது ஏன்?

கோவில் சொத்தை பாதுகாப்பதற்குத் தான் அறநிலையத்துறை இருக்கின்றது. இப்படி அலட்சியம் காட்டக்கூடிய அறநிலையத்துறை இந்து கோவில்களுக்கு தேவையா? என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அறநிலையத்துறை அலட்சியமாக நடந்து கொண்டதா? அல்லது உடந்தையாக இருந்ததா? என்பதைப் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும். நடந்த சம்பவத்திற்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் இந்து முன்னணி தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது’ இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்