கழிவுநீர் கால்வாயில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த கர்ப்பிணி... கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்
அர்ச்சனாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.;
திருச்சூர்,
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வாராந்திரப்பள்ளி அருகே உள்ள மாட்டுமலா பகுதியை சேர்ந்தவர் ஷாரோன் (வயது 39). இவருடைய மனைவி அர்ச்சனா (21). இவர்கள் 2 பேரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். அர்ச்சனா 4 மாத கர்ப்பமாக இருந்தார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று ஷாரோன் வீட்டின் பின்புறம் உள்ள கழிவுநீர் கால்வாயில் அர்ச்சனா தீயில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் வாராந்திரப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
வீட்டில் யாரும் இல்லாத போது, அர்ச்சனா தன் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து இருக்கலாம். உடலில் தீ பரவியதால், வலி தாங்க முடியாமல் ஓடி சென்று கால்வாயில் விழுந்து அப்படியே இறந்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். பின்னர் அர்ச்சனாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அர்ச்சனாவின் தந்தை ஹரிதாஸ் போலீசில் புகார் அளித்தார். அதில், எனது மகளை கணவர் குடும்பத்தினர் அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர். மகளுக்கும், ஷாரோனுக்கும் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. எனவே, அவரை கொலை செய்து விட்டதாக சந்தேகம் உள்ளது. எனவே, ஷாரோன், அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அர்ச்சனா தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாரா அல்லது எரித்து கொல்லப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக ஷாரோனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.