திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டிற்கு சென்று எல்.முருகன் ஆறுதல்
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றக்கோரி பூர்ணசந்திரன் என்ற இளைஞர் தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.;
மதுரை,
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக்கோரியும், தி.மு.க., அரசின் நிலைபாட்டை கண்டித்தும் மருந்து விற்பனை பிரதிநிதி பூர்ணசந்திரன் 40, என்பவர் மதுரை போலீஸ் அவுட்போஸ்ட் பூத்திற்குள் புகுந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆறுதல் தெரிவித்தனர்.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றக்கோரி உயிரிழந்த பூர்ணசந்திரன் வீட்டிற்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் சென்றார். அப்போது பூர்ணசந்திரனின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இது தொடர்பாக எல்.முருகன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”சமீபத்தில், மதுரை திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டுமென்பதை கோரிக்கையாகக் கொண்டு, தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட பூரணச்சந்திரன் அவர்களது இல்லத்திற்கு சென்று, அவரது திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினேன். மேலும், அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொண்டேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.