இறால் பண்ணைத் தொழில் முறைப்படுத்தப்படும்; சொன்னீங்களே செஞ்சீங்களா - நயினார் நாகேந்திரன்
பல்வேறு நோய்கள் ஏற்பட்டு, கடலோரப் பகுதி மக்களின் எதிர்காலமே நிர்மூலமாகி வருவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
விவசாயிகளின் இன்னல்களைப் போக்கும் வகையில் கடலோரப் பகுதிகளில் இறால் பண்ணைத் தொழில் முறைப்படுத்தப்படும் என்று தேர்தல் வாக்குறுதி எண் 72-ல் சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்-அமைச்சரே?
தாங்கள் கொடுத்த இந்த வாக்குறுதியை நீங்கள் தூக்கியெறிந்ததால், கடலோர மாவட்டங்களில் சட்டவிரோத இறால் பண்ணைகள் பல்கிப்பெருகி வருவதோடு, அவற்றில் இருந்து வரும் கழிவுநீர், நிலத்தடி நீரோடு கலந்து, நீராதாரத்தைச் சிதைத்து வருகிறது. இதனால் வயிற்று வலி தொடங்கி தோல் வியாதிகள், கிட்னி பாதிப்புகள் எனப் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு, கடலோரப் பகுதி மக்களின் எதிர்காலமே நிர்மூலமாகி வருகிறது. மேலும், விவசாயமும் சீரழிந்து வருகிறது.
கடலோர மாவட்ட மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகளைக் கட்டித் தருவதாகக் கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்றவில்லையென்றால், அவர்களின் வாழ்விடங்களை மாசுபாடின்றி வைத்திருக்கும் இந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற மனமில்லாத திமுக அரசின் மறதிக்கும் அக்கறையின்மைக்கும் கடலோர மாவட்ட மக்கள் தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.