மேகதாது அணை விவகாரம்: சட்டப் போராட்டத்தில் பின்னடைவாக கருத இயலாது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

எக்காரணத்தைக் கொண்டும் கர்நாடகம் மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பதை ஏற்க இயலாது என வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-11-13 17:55 IST

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“கர்நாடக அரசு கடந்த 15 ஆண்டுகளாக காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் 67.16 டி.எம்.சி. தண்ணீர் தேக்கப்படும்போது, காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீர் அளவு வெகுவாக குறையும், அதன் காரணமாக காவிரி பாசனப் பகுதிகளும், தமிழ்நாட்டின் பெரும்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்பட்டு பெரும் நெருக்கடி ஏற்படும் என்பதால், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு மக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் சட்டப் போராட்டங்களை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் கர்நாடக அரசுக்கு, மத்திய அரசின் நீர் வள ஆணையம் மேகதாது அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கை, சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.

கர்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, அதனை தமிழ்நாடு அரசு, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு போன்ற அமைப்புகளின் கருத்துகளை கேட்டு, அதன் ஒப்புதல் பெற்ற பிறகுதான், மத்திய நீர்வள ஆணையம் அனுமதிக்க வேண்டும் என கோர்ட்டு உத்திரவிட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் தண்ணீர் அளவில் பாதிப்பு ஏற்பட்டால், அது நீதிமன்ற அவமதிப்பு என உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளது.

சட்டப் போராட்டத்தில் பின்னடைவாக கருத இயலாது எனினும், அடிமடை பகுதிகளில் தண்ணீர் தடுக்கப்படும் போது, கடைமடையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற உண்மையை நீதிமன்றம் கருத்தில் கொள்ளத் தவறியது ஏமாற்றம் அளிக்கிறது. எக்காரணத்தைக் கொண்டும் கர்நாடகம் மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பதை ஏற்க இயலாது என்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்